சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 2வது கட்டமாக  2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் 9 நாடாளுமன்ற தொகுதிகளையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளையும் பெற்ற காங்கிரஸ் கட்சி ஏற்கனவே  7 தொகுதிகளுக்கான  நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.  அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற  வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ்  கட்சியின் 2வது கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி,  நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார்.

மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.