சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. சீனா உட்பட 127 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் குறித்த அச்ச உணர்வை நீக்கவேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு பரவியபோது, நம்முடைய பாரம்பரிய முறைப்படி வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம் பயன்படுத்தப்பட்டதை போன்று, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆயுர்வேத-சித்த மருந்துகளை இலவசமாக வழங்கி வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க தேவையான முயற்சிகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மேலும் பரிந்துரைக்கப்பட்ட எண் 95 என்கிற முககவசம் அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும். இந்த நோய் தொற்றின் அறிகுறியை பற்றி உங்கள் கவனத்துக்கு தெரியவந்தால் 24 மணி நேர உதவிக்கு 044-29510400, 29510500 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும். காங்கிரசார், பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
ஆனால் மத்திய சுகாதார அமைச்சகமோ, செல்போன் அழைப்புகளில் ‘லொக்…, லொக்….,’ என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியை பரப்பி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.