சென்னை:
நீலகிரியில் புதியதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், ஏற்கனவே 10 மருத்துவக்கல்லூரிகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இன்று கடைசியாக 11வது மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.
உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மருத்துவக்கல் லூரி டீன் ரவீந்திரன், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் 25 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.447 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இந்த கல்லூரி கட்டிப்பணிகளில்  மத்திய அரசு 60 சதவீத நிதி பங்களிப்பு செய்கிறது.  மீதமுள்ள 40 சதவீத பங்களிப்பு  தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். இந்த கல்லூரி செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் மேலும்  150 மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்.
ஏற்கனவே, ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூா், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரத்து 575 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.