சென்னை: தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் இலவச தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு  இதுவரை  1,97,66,110 டோஸ் கிடைத்துள்ள நிலையில், இதுவரை  1,94,93,414 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 26.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 30,24,272 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள தடுப்பூசிகளில் 99% செலுத்தப்பட்டு விட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கொரோனா 3வது அலையின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பின் மூலம்,  தமிழக சுகாதாரத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை துவங்கப்பட உள்ளது.

நாட்டிலேயே முதன் முறையாக இந்த திட்டத்தை,  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இதுவரை வரை 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 14.22 லட்சம் தடுப்பூசிகள்  கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 70% தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள தடுப்பூசிகளையும் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக விரைந்து தடுப்பூசி செலுத்திட இந்தத் திட்டம் பயன் பெறும் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.