டெல்லி:  தமிழ்நாடு முதலமைச்சர் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மொகல்லா (பிரைமரி ஹெல்த் சென்டர்) கிளினிக்கைப் பார்வையிட்டார்.

டெல்லி கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்காக 4நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினார்.

இதையடுத்து, மதியம் 12மணி அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.  அப்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது நாட்டின் அரசியல் நிலவரம் உள்பட டெல்லி நிலவரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறத.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, மேற்கு வினோத் நகர் பகுதியில் உள்ள ராஜ்கியா சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி முதல்வருடன் சென்று பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அந்த பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

அத்துடன் அங்குள்ள நவீன மொகல்லா (பிரைமரி ஹெல்த் சென்டர்)  கிளினிக்குகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்லியில் அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த சந்திப்பின்போது, தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டிஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள எங்கள் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்கு களை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். அவர் எங்கள் பள்ளிகளை அவருக்கு காட்சிப்படுத்துவது எங்களுக்கு கிடைத்த பெருமை என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் நவீன பள்ளி பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தவர் நாளை நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் டெல்லி முதல்வர் பங்கேற்பார் என்று உறுதியாக நம்புகிறேன், அவருக்கு மாநில மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார்.

மொஹல்லா கிளினிக்:

மொஹல்லா கிளினிக் என்பது  இந்தியில்  அக்கம் அல்லது சமூகம் என்று பொருள். இந்த கிளினிக்குகள் கடந்த 2015ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள்தொகைக்கான சுகாதாரத் தேவைக்கு முதல் தொடர்பு புள்ளியாக இந்த கிளினிக்குகள்  செயல்படுகின்றன, சரியான நேரத்தில் சேவைகளை வழங்குகின்றன, டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள முதன்மை சுகாதார மையங்களாக இருக்கின்றன, அவை மருந்துகள், நோயறிதல்கள் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகளின் அடிப்படை தொகுப்பை இலவசமாக வழங்குகின்றன.