சென்னை
டில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதியோக் கூட்டத்தில் தமிழக பிரச்சினை குறித்து பேசாமல் வீணடித்துவிட்டார் முதல்வர் பழனிச்சாமி என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளளார்.
நேற்று டில்லியில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசாமல் நிதி ஆயோக் கூட்டத்தை வீணடித்து விட்டதாகவும், கூட்டத்தில் முதல்வர் குறைந்தபட்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழகம் ஓரளவு மீளாதா என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்றும்,
ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் தவறி விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “விஷன் 2023” பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதலமைச்சர், அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, பிரதமர் முன்னிலையில் இமாலயப் பொய்யை கூறியிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி யுள்ளார்.
குடிநீர், சுகாதாரம், சாலை, விவசாயிகள் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் திட்டம், அண்டை மாநிலங்களுடனான தடுப்பணை பிரச்சனை ஆகியவை குறித்து பேசாமல் வந்ததற்காக முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.