சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, எதிரான மேல்முறையீடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த பிப்ரவரி மாதம், தலைவர் சரஸ்வதி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் ஆகியோரை நீக்கி அரசாணை வெளியிட்டது. அரசின் திடீர் நடவடிக்கையை எதிர்த்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில், “குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் இல்லாமல், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க முடியாது. தங்கள் நியமனத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் கவுரவ பதவிகள். அரசிடம் எந்த ஊதியமும் பெறாத நிலையில், நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்க்க முடியாது. அரசு சட்டப்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது” என்று வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “கவுரவ பதவியாக இருந்தாலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம் என்று கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழகஅரசு உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மோகனன் கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டி, ஆளுநரின் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு வெளியாகி உள்ளது.
மோகனன் பள்ளி மதமாற்றம் விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!