சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி,  3,184 போலீஸாருக்கு  தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்பதங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி,  தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 3,184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களது பணிகளில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையினர் பொங்கல் பதக்கம் அறிவிப்பு அந்த வகையில் 2024 பொங்கல் விழாவை முன்னிட்டு 3,184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி இதில் காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களில் 3,000 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 119 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் 59 பேருக்கும் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடு இன்றி மாதாந்திர பதக்கபடி ரூ.400, 2024 பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் மேலும் காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, ’தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இப்பதக்கங்கள் பெரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.