நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Must read

புதுடெல்லி:
மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.

கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை மாநில அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதல் வேண்டி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அரசு இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதி, மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கோரினார். இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில், இரு மாநிலங்களின் நலன்களையும் காக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது கூறினார். அதே நேரத்தில் மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகத்திற்கு உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் எடியூரப்பாவிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது. அப்போது கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எந்த வகையிலும் துணைபோகக் கூடாது என வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் முடிவில் பிடிவாதமாக உள்ளன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று டெல்லி செல்கிறார். அவர் இன்று மாலை பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச இன்று (ஜூலை 18ஆம் தேதி) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நண்பகல் 12.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்திக்கிறார்.

More articles

Latest article