சென்னை: சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்

காவல்துறை சார்பில் சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை 2ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை  முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  அதனப்டி, சோழிங்கநல்லூர்., ஆவடியில் கட்டப்பட்ட புதிய காவல் ஆணையரகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதையடுத்து, தாம்பரம் சிறப்பு காவல்துறை அதிகாரியாக டிஐஜி ரவி, ஆவடி ஆணையராக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மக்கள் தொகை அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வைத்தார். அதைதொடர்ந்து இன்று முதல் ஆவடி மற்றும் தாம்பரம் என தனித்தனியாக காவல் ஆணையரகமாக செயல்பட உள்ளது.

சென்னை மாநகர காவல் துறை தற்போது ஒரு கமிஷனர், 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள், மத்திய குற்றப்பிரிவு, நிர்வாகம் என 28 துணை கமிஷனர்கள் ஆகியோர் தலைமையில் 139 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையர் அலுவலகம் என்ற வகையில் 3ஆக தமிழக அரசு பிரித்து உத்தரவிட்டது.

அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,  ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்ட 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று கடந்த ஒரு வாரமாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி எல்லைகள் பிரிக்கப்பட்டது.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு உளவு பிரிவு, நிர்வாக பிரிவு, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என அனைத்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில், அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயிலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளடக்கியுள்ளது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம், மணலி, சாந்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர், மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்தாபுதுப்பேட், பட்டாபிராம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்ேடட், கொரட்டூர்,  திருவேற்காடு, எஸ்ஆர்எம்சி, ஆவடி, டேங்க் பேக்டரி, திருமுல்லை வாயல், திருநின்றவூர்  என சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்தூர், பல்லாவரம், சங்கர் நகர், பெரும் பாக்கம், பள்ளிக்கரணை, கானாத்தூர், செம்மஞ்சேரி, கண்ணகிநகர் என சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம், மணிமங்கலம் என 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் தலைமையிடமாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. அதேபோல்  சோழிங்கநல்லூரில் உள்ள பெரும்பாக்கம் சாலையில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த இரண்டு புதிய காவல் ஆணையரகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் திறந்து வைத்த போது காணொளி காட்சியின் வாயிலாக தாம்பரம் கமிஷனராக கூடுதல் டிஜிபி ரவி சிறப்பு அதிகாரியாக பதவியேற்றார். அதேபோல் ஆவடி கமிஷனராக கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரியாக பதவியேற்றார். அதைதொடர்ந்து இன்று முதல் தாம்பரம் மற்றும் ஆவடி என தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பாடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.