சென்னை: மின்துறையில் செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் !
33/11 கி.வோ(KV) நிறுவு திறனுடன் 46 புதிய துணை மின் நிலையங்கள் !
17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள் !
31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் !
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சூரிய, சந்திர, விண்மீன்களுக்கு அடுத்து உலகை ஒளிமயமாக்கும் அற்புத அறிவியில் சக்தி “மின்சாரம்”. தமிழகத்தில் 1933-ம் ஆண்டில் முதன்முதல் முகிழ்த்த மின்சாரம் இன்று தமிழகத்தை வளப்படுத்திடும் வலிமைமிக்க சக்தியாகத் திகழ்கிறது. 1974-ம் ஆண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை எனும் சாதனையைப் படைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
1990-ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி, வேளாண் உற்பத்தி பெருகச் செய்தார் அவர். இன்று, அவர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். முதல்வர் உத்தரவால், 2021 முதல் மூன்றாண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மின் பிரச்சினையை தீர்க்கும் மின்னகம்: “94987 94987” என்னும் செல்போன் எண் வழியாக, நுகர்வோர் மின்சாரம் தொடர்பாக ஏற்படும் சிக்கல்கள் குறித்து புகார்களைப் பதிவு செய்திட “மின்னகம்” எனும் மாநில அளவிலான மின் நுகர்வோர் சேவை மையம் 2021ல் தொடங்கப்பட்டது. இந்த மின்னகம் வழியாக மக்கள் இருந்த இடத்திலிருந்தே இதுவரை தெரிவித்த 23 இலட்சத்து 97 ஆயிரத்து 957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 99.82 சதவீதப் புகார்கள் மீது தீர்வுகள் காணப்பட்டுள்ளது.
மின் நிறுவுதிறன்: ஆட்சிப் பொறுப்பேற்ற 2021ம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் மொத்த மின் நிறுவுதிறன் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது.
அதிகபட்ச மின் தேவை நிறைவு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு, மே 30 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், மே 2 அன்று 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: 10.9.2023 அன்று காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும் 23.4.2024 அன்று சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுகளும் தமிழகத்தின் மின்சாரத் தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணைபுரிந்துள்ளன.
இந்த அரசு பதவியேற்ற நாளில் இருந்து 3,984 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8,496 மெகாவாட்டாக உயர்ந்து, தமிழக மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.
2021 – 2022ம் ஆண்டில் கட்டடங்களின் கூரைகள் மேல் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி திறனுக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சம் (MNRE) ரூ.7.9 கோடி ஊக்கத் தொகை வழங்கித் தமிழகத்தைப் பாராட்டியுள்ளது. தருமபுரியில் 12 மெகாவாட், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் இணை மின் திட்டங்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தனியாருக்குச் சொந்தமான பழைய திறனற்ற 16.8 மெகாவாட் காற்றாலைகளை மீண்டும் வலுப்படுத்திடும் முயற்சியில் அரசு ஊக்கம் தந்துள்ளது.
மின் உற்பத்தி: மின் வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களின் மூலம் 2020–21ல், உற்பத்தி செய்யப்பட்ட 15,554 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், 2021-22ம் ஆண்டில் 20,391 மில்லியன் யூனிட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டது. இது 31.1 சதவீதம் ஆகும். இது 2022–23ம் ஆண்டில் 22,689 மில்லியன் யூனிட்டுகளாக, 11.27 சதவீதம் அதிகரித்தது. மேலும், 2023–24ம் ஆண்டில் 25,479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 12.3 சதவீதமும் அதிகரித்து தொடர்ந்து சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 2021-22 & 2022-23ம் ஆண்டுகளில் மத்திய மின் ஆணையம் நிர்ணயித்த இலக்கைவிட 1,660.36 மற்றும் 2,261.08 மில்லியன் யூனிட்கள் முறையே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
மின் உற்பத்தி திட்டங்கள்: தமிழகத்தின் சொந்த நிறுவுதிறனை அதிகரிக்கும் பொருட்டு, நான்கு புதிய திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் அதிக அளவு நிலக்கரியைக் குறுகிய காலத்தில் கையாள்வதற்காக, தூத்துக்குடி துறைமுகம் தளம் 1-ல் அதிக கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வட சென்னை அனல் மின் நிலையம் -III திட்டம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து அந்நிலையம் 425 மெகாவாட் அளவுக்கு உற்பத்தித் திறன் அடைந்து, 70.5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. வட சென்னை அனல் மின் நிலையம் -I ல் இருந்து கரி துகள்கள் வட சென்னை அனல் மின் திட்டம் –III -ஐ பாதிக்காமல் இருப்பதற்காக, ரூ.38 கோடி செலவில் தூசித் திரை (Dust Screen) 2023 ஜனவரியில் அமைக்கப்பட்டுள்ளது.
மின் தொடரமைப்பு: 2021ம் ஆண்டு முதல் 54 புதிய துணை மின் நிலையங்கள் 10,779 எம்.வி.ஏ. நிறுவு திறனுடன் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதுள்ள துணை மின் நிலையங்களில் 378 கூடுதல் மின் மாற்றிகள் தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் 6,373 எம்.வி.ஏ. திறனுடன் நிறுவப்பட்டுள்ளன.
3,086.53 சுற்று கி.மீ., மிக உயர் அழுத்த மின் பாதைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தரமான மின்சார விநியோகத்திற்காக, 9 முக்கிய துணை மின் நிலையங்களில் 1,840 மெகாவோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட ரியாக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.
புதிய மின் கோட்டங்களும், மண்டலங்களும்: தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்று புதிய மின்மண்டலங்களும், சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணெய்நல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவல்லி என 11 புதிய கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 29.8.2021 முதல் அதிக மின்பளுவுள்ள பகுதிகள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் நிலவிய பகுதிகளில் தடையின்றிச் சீரான மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 11,038 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. டெல்டா மாவட்டங்களின் கடலோரம் அமைந்துள்ள துணை மின் நிலையங்களுக்கு இடையே செல்லும் 33 கே.வி. மேனிலை உயரழுத்த மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
சுசீந்திரம், திருவரங்கம் திருக்கோயில்களின் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் 46 நிறுவப்பட்டுள்ளன. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகளும் 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
புயலுக்குப் பின்: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் 11,164 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதீத கன மழையால் ஏற்பட்ட சேதங்களை, 5,920 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
சென்னையில், மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மின் தூண் பெட்டிகள் (Pillar Box) கண்டறியப்பட்டு, 5,086 மின்தூண் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களின் போதும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் உள்ள 41 திறன் மின் மாற்றிகளின் அடித்தளம் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டன.
தகவல் தொழில்நுட்பத் துறையின் மேம்பாட்டுப் பணிகள்: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. புதிய விவசாய மின் இணைப்பு, கட்டண மாற்றம், பெயர் மாற்றம், சோலாரை சோலார் அல்லாததாக மாற்றுதல் மற்றும் மின் ரசீது பதிவிறக்கம் போன்ற அனைத்துத் தாழ்வழுத்தச் சேவைகளுக்கான வசதி ஆன்லைன் விண்ணப்ப போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து கள சொத்துக்களின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கபட்டுள்ளது. (ஜியோடேக்கிங்) இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியாவின் முதல் டிஸ்காம் என்ற பெருமை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு கிடைத்துள்ளது. புவியியல் தகவல் முறைமையை வாரிய பொறியாளர்களை பயன்படுத்தி செயல்படுத்தியதன் விளைவாக ரூ. 200 கோடி செலவு சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
சேமிப்பு: 2021-22ம் நிதியாண்டில் தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.2,745 கோடியும் 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ 1,090 கோடி சேமிப்பும் ஏற்பட்டுள்ளது.
சலுகைகளால் 2.36 கோடி வீட்டு உபயோக மின்நுகர்வோர் பயன்: 2022ம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட மின்கட்டணத்தில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டு, நுகர்வோர்களிடம் இருந்து மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 2.36 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் மட்டுமே இலவசம் என்ற நிலை மாற்றியமைக்கப்பட்டு இரு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தி வழங்கியது இந்த அரசு. இதனால் தமிழகத்தில் உள்ள 73,642 கைத்தறி நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட்டுகள் இலவசம் என்ற நிலை மாற்றப்பட்டு இரு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தப்பட்டது. மேலும், மின் கட்டண உயர்வில் 35 காசுகள்/ யூனிட் இரு மாதங்களுக்கு 1,001 யூனிட் முதல் 1,500 யூனிட் வரை மற்றும் 70 காசுகள் / யூனிட் இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள மின் நுகர்வுக்கு குறைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது