சென்னை: ராகுல்காந்தியின் நியாய் யாத்திரை நிறைவு விழா நாளை மும்பையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார். மக்களவைக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவைத் தொடர்ந்து, இண்டி கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் ராகுல் யாத்திரை முடிவு விழா பொதுக்கூட்டத்தில் இண்டி கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தி தற்போலு பல மாநிலங்கள் வழியாக வந்த நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைகிறார். நாளை (17ந்தேத) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யாத்திரை நிறைவு விழா நடைபெற உள்ளது. . இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டமும் நடைபெறுகிறத. இதையொட்டி, இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் அழைப்பின் பேரில்ராகுல் காந்தி. நிறைவு விழாவில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உ.பி., முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் சாம்பாய் சோரன், முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, தீபங்கர் பட்டாச்சார்யா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆனால், உடல்நலம் பாதிப்பு காரணமாக, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வாரா என்பது இதுவரை தெரியவில்லை. இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து பதில் இன்னும் வரவில்லை. இதற்கு காரணம் ராகுல் காந்தியை எதிர்த்து டி. ராஜாவின் மனைவி அன்னி ராஜா வயநாட்டில் போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது. சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சூரியும் இந்த அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. பிடிபி தலைவர் மெகபூபா முப்தியும் பேரணிக்கான அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
அதுபோல, இந்த மெகா பேரணிக்கு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. இவருக்கு பதிலாக இவரது சார்பில் வேறு யாரையாவது அரவிந்த் கெஜ்ரிவால் பிரதிநிதியாக அனுப்பலாம் என தகவல்கள் தெரிவிக்கினற்ன. ஏற்கனவே டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், பஞ்சாபில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் அவர்களுக்குள் சிறு மனகசப்பு இருப்பதால், கெஜ்ரிவால் கலந்துகொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், ராகுல் யாத்திரை நிறைவு விழா மற்றும் இண்டி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார்.