சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  முற்பகல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பருவமழை, துணைமுதலமைச்சர் உதயநிதி அதிகாரம், டாஸ்மாக் கடைகள் குறைப்பது   உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப் பட்டார்.  அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில்,  அமைச்சரவையில் இருந்து, ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் மீண்டும்  வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர் அமைச்சராக்கப்பட்டதுடன்,  கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும்   செப்.29-ம் தேதி பதவியேற்றனர்.

இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது.

புதிதாக அமைச்சரவையில் சேர்ந்துள்ள அமைச்சர்களில் கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதியவர்கள். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக  இன்று (அக்.8) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில்  முதலமைச்சர் பயணத்தின் அடிப்படையிலான அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதுதவிர, தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான நிதி வருகை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இவைதவிர, தமிழ்நாட்டில் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், தற்போதுள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் இருந்து மேலும் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.