சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும், சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் -கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என்றும் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு தெரிவித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முற்பகல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், மற்றும் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றம், அரசியல் நிகழ்வுகள், பருவமழை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டில் மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், மருத்துவத் துறை சார்ந்த உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் ரூ. 9,000 மோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை மூலமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு, காஞ்சிபுரத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 13,180 கோடி மதிப்பில் ஏறத்தாழ 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டத்திலும் புதிய தொழிற்சாலைகள் அமையவுள்ளது. மொத்தம் ரூ. 38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளின் மூலமாக 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில்ன இந்த புதிய தொழில் அமைப்புகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டத்தின்படி என்னென்ன சலுகைகள் உள்ளதோ நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா , சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முதலமைச்சர் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறார் என்றவர், சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் -கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.