சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய  நிலையில்,  2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

இந்த பட்ஜெட்டில்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

விண்வெளித் தொழில்நுட்ப நிதி – ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம்!

250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம்  5,000 பேருக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் காரணமாக  20,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன்மூலம்  17,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.

கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு.

தலா 100 ஏக்கர் பரப்பளவில்,  செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா கோவை – சூலூர், பல்லடம் இடங்களில் அமைக்கப்படும்.

ஓசூர், விருதுநகரில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் ஒசூரில் அறிவுசார் தொழில்நுட்பத் தடம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படும். இதில்,  3,010 ஏக்கர் 14 டிஎம்சி கொள்ளளவு நீர் தேக்கப்படும்.

கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும் என கூறினார்.

நகராட்சி நிர்வாகம்:

தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், நவீன மின் மயானம், நூலகங்கள் மற்றும் கணினியுடன் கூடிய அறிவுசார் மையங்கள் உள்ளிட்ட சமுதாய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,132 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.3,750 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் குறிப்பாக 570 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியிலும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.130 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ஒரு மேம்பாலம் ரூ.310 கோடி மதிப்பீட்டிலும், அதேபோன்று ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.70 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3,450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

இதைப் போன்று, திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை (Waste to Energy Plant), தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1,500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்.

நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்திற்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் ரூ.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.