சென்னை: சென்னையை கலக்கிவரும் பிரபல தாதாக்களில் ஒருவரான புளியந்தோப்பு அஞ்சலை, பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தாதாக்களையும், மொள்ளமாறிகளையும் தெரடர்ந்து தனது கட்சியில் பாஜக இணைத்து வருவது, கட்சியை கொள்ளைக்கூட்டமாக மாற்றுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “யார் வந்தாலும் எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். பின்புலத்தை எல்லாம் ஆராய்ந்து பார்க்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். பா.ஜ.க தலைமை திட்டமிட்டு இவ்வாறு ரவுடிகளை, கொலைகாரர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது என்று முடிவு செய்து மாநிலம் முழுவதும் அவ்வாறாக கட்சியில் சமீபகாலமாக பிரபல ரவுடிகளை சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கொலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட வடசென்னையைச் சேர்ந்த கல்வெட்டு ரவி என்பவர் இணைந்தார். அதையடுத்து, சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி என்ற கிராமத்தில் பா.ஜ.க நடத்திய ஒரு விழாவில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் முக்கிய ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது வடசென்னையின் பிரபல பெண் தாதாவான கஞ்சபுகழ் புளியந்தோப்பு அஞ்சலை என்பவரும் பாஜகவில் இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அஞ்சலைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை வடசென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.
புளியந்தோப்பு தாதாவான அஞ்சலை மீது ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்று 10க்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.