சென்னை:
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளான எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக கூறி, தமிழக மக்களின் கடும் கண்டனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை, பெண்களை பற்றி தவறாக எழுதிவிட்டு இல்லையென மறுப்பதை ஏற்க முடியாது என்று பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கும், எஸ்.வி.சேகரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் செய்தியாளர்களை இழிவு படுத்தும் வகையில் சிலர் வெளியிட்ட கருத்துகளை நான் வன்மையாக கண்டித்து நீக்க சொன்னேன் என்றும், அவர்களிடம் சுயநலம்தான் ஒளிந்துள்ளது என்றும் கடுமையாக தாக்கி பேசியிருந்த நிலையில், இன்று, நேரடியாகவே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் செய்தியாளர்கள் கன்னத்தில் கவர்னர் தட்டிய விவகாரம் விசுவரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து கவர்னர் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் எச்.ராஜா, கனிமொழியின் பதிவுக்கு பதில் சொல்லும் வகையில், கருணாநிதி, கனிமொழி குறித்து மிகவும் கீழ்த்தரமாக சமுக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தனது பதிவை நீக்கினார்.
இந்த பரபரப்பான சூழலில், எஸ்வி.சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து அறுவறுக்கத்தக்க வகையில் கீழ்த்தரமான பதிவை தனது முகநூல் வலைதளத்தில் பதிவேற்றியிருந்தார்.
இது தமிழகத்தில் பணிபுரியும் பெண்களிடையேயும், செய்தியாளர்களிடையேயும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நேற்று செய்தியாளர்கள், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மற்றும் எஸ்.வி.சேகரின் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் போலீசிலும் புகார் கொடுத்தனர். இதன் காரணமாக எஸ்.வி.சேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜக குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “பெண் செய்தியாளர்களை பாஜக மிகவும் மதிக்கிறது. எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அவர்கள் பணிபுரிகிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார்.
மேலும்,பெண்களை பற்றி தவறாக எழுதிவிட்டு இல்லையென மறுப்பதை ஏற்க முடியாது என்று தனது கட்சி நிர்வாகிகளான எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் ஒருமுறை கருத்தை பதிவிட்டுவிட்டால், அது பரவிக்கொண்டே தான் இருக்கும். எஸ்.வி.சேகரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை இழிவுபடுத்தினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.எஸ்.வி.சேகர்மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகிறேன். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் ஏற்பட பாஜக முயன்று வருகிறது என்று கூறினார்.
இதன் காரணமாக தமிழக பாரதியஜனதாவில் பரபரப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே தமிழிசையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் முயற்சித்து வந்த நிலையில், தற்போது தமிழிசை இருவரையும் நேரடியாக தாக்கி பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.