சென்னை: தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று தர வரிசைபட்டியல் வெளியாகும் என  தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவ ர்களை சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 7ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் மட்டுமே உரிய சான்றுகளையும் பதிவேற்றி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணி அளவில் தரவரிசை பட்டியல் வெளியிட தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.