சென்னை: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனி  தீர்மானம் கொண்டு வந்து, அதை முன்மொழிந்துள்ளார். அதில்,  மத்தியஅரசின் வேளாண் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும்  கூறப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானத்துக்கு  ,காங்கிரஸ் உள்பட திமுக ஆதரவு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் தீர்மானம் நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் பேசிய ஓபிஎஸ், வேளாண் சட்டங்கள் குறித்து, முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவசர கோலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என கூறியதுடன்,  மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டும் என கூறி, தீர்மானத்தை ஏற்க மறுப்பதாக அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது பேசிய  பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  “மத்திய அரசால் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள்,வேளாண்மக்கள் நல்ல முறையில்வாழ வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் உற்பத்தி செய்த நல்ல பொருட்களுக்கு அதன் அடிப்படை ஆதார விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால்,மாநில அரசாங்கம் ஏதோ உள்நோக்கத்தோடு,மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானங்களை கொண்டு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானது.எனவே,இதனை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர், டெல்லி, மேற்குவங்கத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.