சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 16ந்தேதி தொடங்கியது. அன்று தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தமிழக பட்ஜெட்டை வாசித்தார். அதைத்தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டம்
இன்று முதல் 24 ம்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தற்போது நடைபெற இருக்கும் கூட்டத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும்.
இந்த சட்டசபை கூட்டம் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேரவை மரபுகளை மீறி நடந்து கொண்டதாக திமுக எம்எல்ஏக்கள் 8 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் புயலை கிளப்ப திமுக தயாராகி வருகிறது. மேலும், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர தி.மு.க. நோட்டீஸ் கொடுத்துள்ள தால், அதனை உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள திமுக வலியுறுத்தும் என்று தெரிகிறது.
மேலும், இலங்கை பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை விவகாரம், நீட் தேர்வு, குடிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப திமுக முடிவு செய்துள்ளது.
அதன் காரணமாக இந்த சட்டசபை பட்ஜெட் தொடர் கூட்டம் அமைதியாக விவாதிக்கப்படுமா அல்லது அமளி துமளி காரணமாக காரசாரமாக இருக்குமா எனபது போகப்போகத்தான் தெரியும்.