மதுரை:

கீழடியில் அகழ்வாய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை, நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

தமிழகத் தொல்லியல் துறை, 2019-20 ஆண்டில் பல தொல்பொருள் ஆராய்ச்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது. அதில் குறிப்பாக, நீருக்கடியிலான தொல்லியல் ஆராய்ச்சிகளும் நடத்தத் திட்டமிட்டுள்ளது தொல்லியல் துறை.

தமிழகத் தொல்லியல் துறையின் அறிவிப்பின்படி, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவகங்கை மாவட்டத்திலும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது இனியும் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.

அதோடு தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் உள்ளிட்ட இடங்களி லும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், தொல்லியல் ஆய்வுகள் இனி அதிகரிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என,அந்த நதிக்கரைப் பகுதிகளில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து தாமிரபரணியில், முறையான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தவும் தொல்லியல்துறை தயாராகிவருகிறது.

கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் அரேபியர்களுடன்  சங்ககாலம் தொட்டு தமிழர்கள் வணிகத் தில் ஈடுபட்டுவந்தனர். இதுகுறித்து மேலும் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது தொல்லியல் துறை.

அதனால், கடற்கரைப் பகுதிகள் முதல் நீருக்கடியிலும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்ற னர்.  இதற்காகத் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தி யுள்ளது.

மத்திய தொல்பொருள் ஆலோசனைக் குழு மற்றும் இந்தியத் தொல்பொருள் கழகத்துக்கு இந்த ஆராய்ச்சிக்கான அனுமதியைக் கோரியிருக்கிறது தமிழகத் தொல்லியல்துறை. அனுமதி கிடைத்ததும், 2020 ஜனவரி முதல் இதற்கானப் பணிகள் துவங்கும் என தொல்லியல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத் தொல்லியல் துறை, இதுவரை ஆலங்குளம், தொண்டி, கொடுமணல், கொற்கை, மாங்குளம், பேரூர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறது.