டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை இந்தி கைப்பற்றி உள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இப்போது நாட்டின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஜூலை 2019 இன் தொடக்கத்தில், அதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள “வழக்கமான தீர்ப்புகள்” அஸ்ஸாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்ப்புகளின் பிரத்யேக முகப்பாக மாறியது. பின்னர் அனைத்து மாநில மொழிகிளலும் மொழி பெயர்க்கும் நடவடிக்கை அமல்படுத்தப் பட்டது.
வட மாநிலங்கள் தங்கள் உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியான இந்தியைப் பயன்படுத்தினாலும், சட்டத்தின் மொழி ஆங்கிலம் என்பது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அதனால் உச்சநீதிமன்ற விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் ஆங்கில மொழியிலேயே விவாதிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து உச்சநீதிமன்ற த்தில் பேசிய தலைமை நீதிபதி சந்திசூடு, நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர்- 19ம் தேதி) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும்போருது, “அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்தி, வங்காளம், தமிழ் உள்பட 22 மொழிகளில் தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. விசாரணையின்போது ‘மின்னணு உச்சநீதிமன்ற அறிக்கைகளில் (இ-எஸ்சிஆா்)’ உள்ள தீர்ப்புகளில் இருந்து வழக்குரைஞர்கள் நடுநிலையான மேற்கோள்களை வழங்கலாம்.
இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களை அடைவதை இது உறுதிப்படுத்தும். மொழி பெயர்க்கப்பட்ட தீர்ப்புகள் இறுதி ஆய்வு செய்யப்படுகிறது. ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.