திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு ‘எஸ்கேப்’ ஆன ‘பலே’ தமிழ் சினிமா கதாநாயகன் !

எம். பி. திருஞானம்

திருப்பதி வெங்கடாசலபதி, உலகப் புகழ்பெற்ற தெய்வம் ! இவரை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், இந்தியா வருகிறார்கள் ! திருப்பதிக்கு படையெடுக்கிறார்கள் ! நாளொன்றுக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசிக்க வருகிறார்கள் ! சராசரியாக ஆண்டுக்கு 3 கோடி முதல் 4 கோடி பக்தர்கள் “கோவிந்தா…கோவிந்தா…” என்று, சன்னதியில் கோஷமிடுகின்றனர் ! இது இப்போதைய நிலவரம் !

◆ நாம் சொல்லும் தமிழ் சினிமாவின் ‘புரட்சிக் கதாநாயகன்’ 1950 வாக்கில், திருப்பதிக்கு தனது நண்பர்களோடு போனார் ! அவர்களும் நடிகர்கள்தான் !
◆ அப்போதெல்லாம், இப்போதுபோல், வழவழப்பான சாலை, போக்குவரத்து ஏற்பாடு, போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கிடையாது ! நாளொன்றுக்கு ஆயிரம் – ரெண்டாயிரம் பேர், கோவிந்தனை தரிசிக்க வருவதே, பெரிய விஷயம் !
◆ இந்த மாதிரியான சூழல் உள்ளபோது, நம்ம கதாநாயகன், கோவிந்தனை தரிசிக்க,
சக நடிகர்களோடு, மூலஸ்தானம் வரை சென்றார் !
◆ அப்போது, ‘கும்’னு ஒரு வாசனை, நம்ம கதாநாயகனின் மூக்கை துளைத்தது !தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் எல்லோரது மூக்கையும்தான், அந்த வாசனை ‘கிர்’ செய்திருக்கும் !
◆ எல்லோரும் “கோவிந்தா…கோவிந்தா…” என்று, மனம் உருக வேண்டி – உற்சாக முழக்கம் செய்து, பெருமாளை சேவித்தபடியே நகர்ந்தனர் ! நம்ம கதாநாயகன், எல்லோரையும் போல, சாதாரண பக்தரா என்ன ? ‘புரட்சிகர கதாநாயகன்’ அல்லவா ?
◆ இது என்னன்னு உற்றுப் பார்க்கிறார் ! அது சந்தனக் கலவை ! வெறும் சந்தனக் கலவையா இப்படி அளவிடமுடியாத வாசனையை கொடுக்கிறது ? நண்பரிடம் இதுபற்றி, விவரம் கேட்டார் !

அவரு, “இது வெறும் சந்தனம் மட்டுமில்லை… இதிலே பச்சைக் கற்பூரம், அத்தர், புனுகுன்னு ஏகப்பட்ட வாசனை திரவியங்கள் கலந்திருக்கு. இந்த சந்தனக் கலவைக்கு “ஸ்ரீபாதசாகரம்”னு பேரு. வெங்கடேசப் பெருமாளை தரிக்கவரும் பக்தர்கள், “கோவிந்தா… கோவிந்தா…” என்று ஆக்ரோஷமாக கோஷம் போடுவதால், பெருமாளுக்கு அடிக்கடி தலைவலி வரும். அதைப் போக்க, தலைவலி நீக்கும் மருந்தாக “ஸ்ரீபாதசாகரம்” சந்தனக் குழம்பை எடுத்து, வெங்கடேச பெருமாளின் தலையிலும் உடலிலும் குருக்கள் அடிக்கடி பூசிவிடுவார்கள்…” என்றார், நண்பர் !
◆ நம்ம ‘புரட்சிகர கதாநாயகன்’ யோசிச்சார் ! அவங்களா கொடுத்தா, தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுப்பாங்க. இந்த சந்தனக் கலவையில் குளித்து எழனும்னு ஆசையா இருக்கே… இப்ப என்ன செய்யலாம் ?
◆ அந்த பிரம்மாண்டமான சந்தன பேளா, நம்ம கதாநாயகனை சுண்டி இழுத்தது ! அதிலிருந்து பாதியளவு சந்தனத்தை ‘சட்’டென்று வழித்து, மடியில் வைத்துக் கட்டிக்கொண்டார் !
அதன் எடை, சற்றேறக் குறைய ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும் !
◆ அன்றைக்கு, நம்ம கதாநாயகனுக்கு நேரம் சரியில்லை ! இவர் சந்தனக் கலவையை திருடுவதை ஒரு அர்ச்சகர் பார்த்துவிட்டார் ! அவர், “இங்கே வெச்ச சந்தனத்தில் பாதியை எவனோ திருடிட்டான். அவன் இந்த இடத்தைவிட்டு வெளியே போறதுக்கு முந்தி பிடிக்கணும். எல்லா கதவையும் மூடுங்க…”ன்னு, கத்த ஆரம்பிச்சிட்டார் ! ஒவ்வொரு கதவா மூட ஆரம்பிச்சாங்க ! பரபரப்பு கூடிப்போச்சு, பக்தர்கள் மத்தியில் !
◆ என்ன பிரயோஜனம் ?
◆ நம்ம ஆளுதான், “புரட்சிகரமான கதாநாயகன்” ஆயிற்றே ! சக நடிகர்களுக்கே தெரியாமல், அர்ச்சகர்கள் கண்களில் சிக்காமல், ‘கிரேட் எஸ்கேப்’ ! ஓட்டமும் நடையுமாக, மேல் திருப்பதியிலிருந்து, குறுக்கு வழியில், திருப்பதியின் அடிவாரத்திற்கு வந்து, ‘ரெஸ்ட்’ எடுத்தபடியே இருந்தார் !
◆ நம்ம கதாநாயகனின் உடன்வந்த மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோரும், பிரச்னை இல்லாமல் சன்னதியைவிட்டு வெளியே வந்து, “எங்கேப்பா நம்ம புரட்சிக் கதாநாயகன் ?” என்று தேடினார்கள் ! புரிஞ்சி போச்சு ! கீழே வந்தார்கள் ! நம்ம கதாநாயகனைப் பார்த்து, “இப்படிக்கூட செய்யலாமா?” என்று கேட்டார்கள் !
◆ நம்ம கதாநாயகன், ”நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது ?”ன்னு கேட்டபடியே, மடியில் இருந்த சந்தனக் கலவையை ‘லேசா’த் தொட்டு, நண்பர்கள் எல்லோர் மீதும் பூசிவிட்டார், நம்ம புரட்சிக் கதாநாயகன் !
◆ நம்ம கதாநாயகன் திருடிக் கொண்டுவந்த வெங்கடேசப் பெருமாளின் தலைவலி மருந்தான ‘ஸ்ரீபாதசாகரம்’ சந்தனக் குழம்பில்தான், அந்த மாதம் முழுக்க குளித்துக் களித்து இருந்திருப்பார், நம்ம ‘புரட்சிகர கதாநாயகன்’ என்று உறுதியாக நம்பலாம் !
●●
1950…
யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் குழுவில் நடிகவேள் எம்.ஆர். ராதா, முக்கிய வேடங்களில் நடிக்கும் முக்கிய நடிகராக இருந்தார் ! யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, 1942 லேயே ‘மனோன்மணி’ படத்தில், ‘யதார்த்தம்’ என்ற பாத்திரத்தில் நடித்து, புகழ் பெற்றவர் ! இந்த நாடகக் குழுவினர், வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க, திருப்பதி சென்றனர் ! அந்தக் குழுவில் ‘நடிகவேள்’ என்று பின்னாளில் புகழ்பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் கதாநாயகன் எம்.ஆர். ராதாவும் இருந்தார் !
◆ அவர்தான், திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கான தலைவலி மருந்தான ‘ஸ்ரீபாதசாகரம்’ என்ற வாசனை மிக்க சந்தனத்தை, ‘சட்’டென்று திருடி, மடியில் கட்டிக்கொண்டு கீழ் திருப்பதிக்கு ‘எஸ்கேப்’ ஆனவர் !
◆ இது, கதையல்ல ! ‘நடிகவேள்’ எம். ஆர்.ராதாவே, கொடுத்துள்ள வாக்குமூலம் !
◆◆
1950 காலகட்டத்தில், எம்.ஆர். ராதா திருடிய சற்றேறக் குறைய ஒரு கிலோ சந்தனத்தின் மதிப்பு, இப்போது என்ன விலை மதிப்பு இருக்கும்னு, ஒரு கணக்குப் போட்டோம் !
◆ பிரசாதம் விற்கும் இடத்தில் ‘லட்டு’ விற்கும் விஷயமும் மிளகு வடை விற்கும் விஷயமும் மட்டும்தான் பலருக்கும் தெரியும் ! ‘ஸ்ரீபாதசாகரம்’ சந்தனப் பொட்டலமும் அப்போது (இப்போது அல்ல) விற்கப்பட்டது !

◆ பெருமாளுக்கு – தலைவலிக்காக நெற்றியிலும் உடம்பிலும் பூசிவிடும் ‘ஸ்ரீபாதசாகரம்’ சந்தனத்தை வாரம் ஒரு முறை சேகரித்து, அதை 10 கிராம் அளவுக்குப் பிரித்து – வாழை இலையில் வைத்து, பொட்டலம் கட்டி, பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளனர் ! 1950 ல், ஒரு பொட்டலம்  விலை – ஒரு ரூபாய் ! தங்கம் விலை எவ்வளவு தெரியுமா ? ஒரு கிராம் : 1 ரூபாய் ! அதாவது, 10 கிராம் தங்கம் – 10 ரூபாய் !
◆ இப்ப ஒரு கணக்குப் போடுங்க ! நடிகவேள் எம்.ஆர். ராதா திருடிக்கொண்டுவந்த ‘ஸ்ரீபாதசாகரம்’ என்கிற சந்தனத்தின் எடை ஒரு கிலோ என்றால், 10 கிராம் எடையுள்ள 100 பொட்டலங்கள் கட்ட முடியும் ! ஒரு பொட்டலம் விலை : ஒரு ரூபாய் ! நூறு பொட்டலத்தின் விலை : 100 ரூபாய் !
 
◆ அதாவது, இந்த நூறு ரூபாயில் அப்போது 100 கிராம் தங்கம் வாங்கியிருக்கலாம் !
2020 மே 10 நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை : ஒரு கிராம் ரூ. 4437 ! 100 கிராம் என்ன விலையாகுது ?  ரூ. 4 லட்சத்து 43 ஆயிரத்து 700 ஆகுது !
◆ நடிகவேள் எம்.ஆர். ராதா எதைச் செய்தாலும், எளிமையாகவும் அதே நேரம், பிரம்மாண்டமாகவும் செய்து அசத்துபவராச்சே ! அதனால், இந்த சந்தனத் திருட்டையும், பிரம்மாண்டமா செய்து, ஒரு மாத காலத்துக்கு மேலே, சற்றேறக் குறைய நாலரை லட்சம் ருபாய் மதிப்புள்ள சந்தனத்திலேயே குளித்து-களித்திருக்கிறார் !
இது, உலக அளவில், ஒரு கின்னஸ் ரெகார்டாகக் கூட இருக்கலாம் ! ஆனால், இந்த சுவையான – மணம் கமழும் திருட்டு நடந்த சமயத்தில் [1950], ‘கின்னஸ் ரெக்கார்டு’ நூல் வரவே இல்லை ! அது, 1955 ல் தான் வெளிவர ஆரம்பித்தது !

◆◆