பருவமழை வேகமாக நெருங்கும் நிலையில் தாமப்ரம் பகுதி மக்கள் இந்த ஆண்டும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது என்று திமுக எம்.எல்.ஏ. ராஜா கூறியுள்ளார்.

அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. ராஜா இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பருவமழையைச் சமாளிக்க நன்கு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4.5 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டு தாம்பரம் மழையால் பாதிக்கப்படாது என்று ஆணையர் பாலச்சந்தர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜா இந்த ஆண்டும் தாம்பரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்றும், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

எம்எல்ஏ ஆவதற்கு முன்பு தாம்பரம் நகராட்சி சேர்மனாக இருந்துள்ள ராஜா 2015ம் ஆண்டு முதல் தாம்பரத்தில் ஏற்படும் வெள்ளபாதிப்புகளை கவனித்துவருவதாகக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை தோல்வி அடைந்து வருவதாகக் கூறினார்.

“இந்த ஆண்டும் தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும். சூழ்நிலையை சமாளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தயார் செய்ய வேண்டும்,” என்று பேசினார்.

ராஜாவின் இந்த பேச்சு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. இருந்தபோதும் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எம்.எல்.ஏ. ராஜா கூறுவது நிதர்சனமான உண்மை என்று கூறினர்.

மேலும், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதாகவும் அவற்றை சுத்தம் செய்து புதிய மதகுகள் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு கால்வாய்களை சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறியதால் கடந்த 2023ம் ஆண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது.

சிடிஓ காலனி, முடிச்சூர், கன்னடபாளையம், வசந்தம் நகர், பெருங்களத்தூர் போன்ற பகுதிகள் இந்த ஆண்டும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன என்று அதிமுக கவுன்சிலர் ‘ஸ்டார்’ பிரபா கூறினார்.