சென்னை: ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனை ஏற்கனவே 213 படுகைகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 400 படுக்கைகள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தரம் உயர்த்தப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம்பரம் சானிட்டோரியத்தில் அமைந்துள்ள மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் புதிதாக 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளையும், 6 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனை களையும் அமைப்போம் என அறிவித்தார். அதன்படி, அந்தப் பணிகளுக்காக ரூ. 1,018 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 400 படுக்கைகளுடன் கூடிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 6 அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன. இங்கு புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் ரேடியோ கண்டறிதல் கட்டிடம், எக்ஸ்ரே, ஃப்ளோரோஸ்கோபி, அவசரகால அறுவை சிகிச்சை மையம், ரத்த வங்கி, டயாலிசிஸ் வார்டு, மகப்பேறு கட்டிடம் ஆகியவையும் உள்ளன. மேலும் இந்த மருத்துவமனைக்கு அருகில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தனிமைப்படுத்துதல் கட்டிடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதே போல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல் மருத்துவமனை மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான ஆய்வகம் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு மருத்துவமனை கட்டிடங்களையும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2021ம் ஆண்டு இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டிடம் கட்டுவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. 6 தளங்கள், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை அறைகள், 289 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, என மொத்தம் 400 படுக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தரை தளத்தில் புற நோயாளிகள், முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, 2வது தளத்தில் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, 3வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, நீரிழிவு நோய் பிரிவு, 4வது தளத்தில் தீக்காயம் பிரிவு, 5வது தளத்தில் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, 6வது தளத்தில் ஆண், பெண்களுக் கான பொது பிரிவு என திட்டமிட்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.