சென்னை: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல உதவி செயற்பொறியாளரை வெளியேற்றி அறைக்கு பூட்டு போட்ட விவகாரத்தில், முன்னாள் திமுக நிர்வாகியான, கைது செய்யப்பட்ட சுயேச்சை மண்டலக் குழுத் தலைவர் ஜெயபிரதீப், பின்னர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
மண்டலக் குழு தலைவர் ஜெயபிரதீப் திமுகவில் சீட் கொடுக்கவில்லை என்பதால் தனித்து நின்று வெற்றி பெற்று, அவருடைய ஆதரவாளர்கள் மூலம் மண்டல குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது ஆட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே தாம்பரம் மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், மண்டல குழு தலைவர் தேர்தல் திமுக 4 மண்டலத்தில் வெற்றி பெற்றது. மேலும், சுயேச்சையாக போட்டியிட்ட திமுக ஆதரவாளர் ஜெயபிரதீப் ஒரு மண்டலத்தை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள 3-வது மண்டலமான செம்பாக்கத்தில் திமுக சார்பில் மகாலட்சுமி கருணாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 40- வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற பிரதீப் சந்திரன் போட்டியிட்டார். மொத்தம் உள்ள 14 வாக்குகளில் இருவருக்கும் சமமாக தலா 7 வாக்குகள் கிடைத்தன. அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் பிரதீப் சந்திரனுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் குலுக்கல் முறை கையாளப்பட்டது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதீப் சந்திரன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் திமுகவுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டு வருகிறார்.
தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாகராட்சியின் 3வது மண்டலம் காமராஜபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்க மண்டல குழு தலைவராக ஜெயபிரதீப் என்பவர் உள்ளார். இவர் திமுகவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக ரகுபதி (58) மற்றும் இளநிலை பொறியாளராக பழனி (58) என்பவர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கும் மண்டல குழு தலைவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு, உதவி செயற் பொறியாளர் ரகுபதியிடம் தகராறில் ஈடுபட்ட ஜெயபிரதீப், அதிகாரியை அறையில் இருந்து இழுத்து வெளியேற்றி விட்டு, அந்த அறைக்கு பூட்டு போட்டுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்களை அறையின் வெளியில் நிறுத்தி வைத்து, அலுவலகத்தினுள் செல்ல முடியாதவாறு மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ரகுபதி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சியின் தலைமை செயற்பொறியாளர் ஞானவேல், பூட்டிய அறையைத் திறக்க சென்ற நிலையில், அவரிடமும் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் குறுக்கிட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஞானவேல் மாநகராட்சி அதிகாரிகள் மண்டலக்குழுத் தலைவர் ஜெயபிரதீப் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மண்டல குழுத் தலைவர் ஜெயபிரதீப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை நிறைவுபெற்ற நிலையில், மண்டலக் குழு தலைவர் ஜெயபிரதீப் காவல் நிலைய பிணையில் இருந்து விடுவிக்கபட்டுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி பொறியாளர்களை தொடர்பு கொண்ட நிலையில், “ஏன் அலுவலகத்தை பூட்டினார் என்பது தெரியவில்லை. மண்டலக் குழு தலைவர் ஜெயபிரதீப் திமுகவில் சீட் கொடுக்கவில்லை என்பதால் தனித்து நின்று வெற்றி பெற்று, அவருடைய ஆதரவாளர்கள் மூலம் மண்டல குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தனித்து போட்டியிட்டதால் திமுகவில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வருகிறார். தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.