டில்லி
விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியில் இந்த போராட்டம் கடுமையாக உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் விவசாய பிரதிநிதிகள் வேளாண் சட்டம் தொடர்வது குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கும் அரசின் கோரிக்கையை இரண்டாம் முறையாக நிராகரித்துள்ளனர். தற்போது குழுவுக்கு அவசியமில்லை என அவர்கள் காரணம் கூறி உள்ளனர். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் கலந்துக் கொள்ளப் பஞ்சாப் மற்றும் அரியானாவில் இருந்து மேலும் விவசாயிகள் டில்லிக்கு வந்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்ட முக்கியமான 10 விவரங்கள் பின்வருமாறு :
- வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்குமாறு ஆலோசனை அளித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த குழுவில் இடம் பெற உள்ள பிரதிநிதிகளின் பெயர்களை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த குழுவில் அரசு மற்றும் வேளாண் ஆர்வலர்களும் இடம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
- பேச்சு வார்த்தைக்குப் பிறகு அமைச்சர் தோமர், “நாங்கள் ஒரு சிறு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினோம். ஆனால் விவசாயிகள் அனைவருமே பேச்சு வார்த்தையில் பங்கு பெற விரும்பினர். எங்களுக்கு அதில் ஆட்சேபம் இல்லை. நாங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறோம். அது விவசாயிகளின் முடிவில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய புள்ளியான பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ரூப் சிங், “இதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கும் அரசின் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். வேளாண் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து திருத்தங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும். அரசு எவ்வித சக்தி கொண்டு அடக்க முயன்றாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் சிறப்புக் குழு அமைக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது போராட்டத்தில் கலந்துக் கொண்ட பல விவசாயிகள் சங்கத்தினர் அதை எதிர்த்து தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி இருந்தனர்.
- அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் வார்க் சிங், “இன்று அனைத்து விவசாயத் தலைவர்களும் கூடி நேற்றைய பேச்சு வார்த்தையைக் குறித்து விவாதிக்க உள்ளோம். அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 3 முதல் தினமும் அரசுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடரும். இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த விவசாய அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
- இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு சந்திப்பை நடத்த உள்ளார். பாஜக தலைவர் ஜே பி நட்டாவின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
- பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆஸாத் டில்லியின் வெளியே முகாமிட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்தார். அப்போது அவர், “விவசாயிகளின் போராட்டத்தை அவமானப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. நமது தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் வேகமாக நீர் பீய்ச்சுதல், கம்பி வேலிகள், மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகள் இல்லை. அரசின் இந்த நடவடிக்கையால் அவர்கள் விவசாயிகள் போராட்டத்தால் எந்த அளவு அச்சம் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
- அரியானா மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தும் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா விவசாயிகள் விவகாரத்தில் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவருடைய தந்தையும் விவசாயிகளின் ஆதரவாளருமான அஜய் சவுதாலா அரசு விவசாயிகளின் கோரிக்கைகளைப் பெரிய மனதுடன் யோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் கொண்ட குழு ஒன்று டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் ஒன்றை நடத்தி தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுகளைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளனர். ஒலிம்பிக் ஹாக்கி வீரர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற சஜ்ஜன் சிங் சீமா இதைத் தெரிவித்துள்ளார்.
- நீர் பீய்ச்சுதல், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், மற்றும் காவல் துறையினரின் வேலிகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் சென்ற வாரம் முதலே வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்த வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என்பதால் அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காமல் போகலாம் எனவும் இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கருணையில் வாழ வேண்டி வரலாம் எனவும் விவசாயிகள் தெரித்துள்ளனர்.