இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களும் மேற்கு வங்கத்துடன் சிலிகுரி வழித்தடம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
35 கி.மீ. அகலம் கொண்ட இந்த சிலிகுரி வழித்தடம் இந்தியாவின் “சிக்கன் நெக்” என்று வர்ணிக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளில் துண்டித்துவிடலாம் என்று வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் கூறியிருந்தார்.
மேலும், சீனாவிற்கு சமீபத்தில் விஜயம் செய்த யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு பகுதி “நிலத்தால் சூழப்பட்டுள்ளது” என்றும் வங்காளக் கடலில் வங்காளதேசம் தான் அதன் “கடலின் ஒரே பாதுகாவலர்” என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இந்தியாவின் “சிக்கன்ஸ் நெக்” போல் வங்கதேசத்தில் இரண்டு இடங்களில் இதுபோல் குறுகிய வழித்தடங்கள் உள்ளதாக” சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கதேசத்தின் வரைபடத்தை இணைத்துள்ள அவர், “முதலாவது தக்ஷின் தினாஜ்பூரில் இருந்து தென்மேற்கு காரோ மலைகள் வரையிலான 80 கிமீ வடக்கு வங்கதேச வழித்தடம். இங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் வங்கதேசத்தின் முழு ரங்பூர் பிரிவையும் தனிமைப்படுத்தக்கூடும்” என்று சர்மா எச்சரித்துள்ளார்.
தவிர, “இரண்டாவது, 28 கிமீ சிட்டகாங் வழித்தடம், தெற்கு திரிபுராவை வங்காள விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்தக் குறுகிய பகுதிதான் வங்காளதேசத்தின் பொருளாதார மற்றும் அரசியல் தலைநகரங்களுக்கு இடையேயான ஒரே தொடர்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இராணுவ வலிமையைக் குறிப்பிட்டுள்ள அசாம் முதல்வர், வங்காளதேசத்திற்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி நினைவூட்டி, “இந்தியாவைத் தாக்குவதற்கு முன்பு வங்காளதேசம் 14 முறை மீண்டும் பிறக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
அதேவேளையில், சிக்கன்ஸ் நெக் அருகே இரண்டாம் உலகப் போரின் விமானத் தளத்தை மீண்டும் உருவாக்க சீனா வங்காளதேசத்திற்கு உதவுவதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் அசாம் முதல்வரின் இந்த கருத்து இந்த பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.