இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை, ஆஃப்கானிஸ்தான் பிரச்சினையுடன் ஒப்பிட்டுவரும் பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தாலிபன் தீவிரவாத அமைப்பு.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து, அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. இந்திய அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச அளவில் பல நாடுகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் நினைத்த ஆதரவு கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மறுபுறமோ, இப்பிரச்சினையை ஆஃப்கன் பிரச்சினையுடன் ஒப்பிட்டுப் பேசியது அந்நாடு. ஆனால், பாகிஸ்தானின் இந்தக் கருத்துக்கு, தாலிபான் அமைப்பு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

மற்ற நாடுகளின் பிரச்சினைக்கு ஆஃப்கானிஸ்தானை ஒரு வேடிக்கைக் களமாக்காதீர்கள் என்று கூறியுள்ள தாலிபான் அமைப்பு, காஷ்மீர் பிரச்சினையை ஆஃப்கன் பிரச்சினையுடன் ஒப்பிடுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், இரண்டு பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.

பதிலாக, காஷ்மீர் பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க இரு நாடுகளும் செயலாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.