காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில், ஏற்கனவே பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போத,  உடற்பயிற்சி கூடமான ‘ஜிம்’ மற்றும் பூங்காவுக்கு செல்லவும் பெண்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு தடை விதித்து உள்ளது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முஸ்லிம் நாடான ஈரானில், ஹிஜாப் அணிவதற்கே எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் போராடி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் அந்நாட்டு மக்களை  மீண்டும் கற்காலத்திற்கே அழைத்துச்சென்றுகொண்டிருக்கின்றனர். 

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்றதும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவியை நிறுத்தினார். இதனால், அந்நட்டில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறினர். இதையடுத்து, அங்கிருந்த ஆட்சிக்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆயுதப் புரட்சி மூலம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். தலிபான்களின் அரசை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே பல அதிரடி சட்டங்களை அமல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு விவகாரங்களிலும் தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் தலிபான்களின் அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. தாலிபான் சிறுமிகள்,  நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன்,  பெண்கள் பணிபுரிவதற்கும் தடைவிதித்தனர். பொது இடங்களுக்கு வரும் பெண்கள், தலை முதல் கால் வரை துணியால் மறைக்கப்படும் ‘பர்தா’ அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தற்போது பெண்கள் ஜிம் மற்றும் பூங்காவுக்குச் செல்ல தடைவிதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் ஒழுக்க பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மொகம்மத் அகெப் மொகாஜீர் வெளியிட்டுள்ள தகவலில், பெண்களும், ஆண்களும் வாரத்தில் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பூங்காவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாகவே இருக்கின்றனர். பெண்கள் ஹிஜாப் அணிவதையும் தவிர்க்கின்றனர். எனவே, பெண்கள் ஜிம், பூங்காவுக்குச் செல்ல தடை உத்தரவு பிறக்கப்பட்டு, இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. இதை, தலிபான் குழுக்கள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.