தமிழக அரசியலில் சிலருக்கு ‘ராஜகுரு’ என்ற அந்தஸ்தில் செயல்பட்ட ‘சோ ராமசாமி’ மறைந்தவுடன், அந்த இடத்திற்கு வாலன்டியராகவே வந்து அமர்ந்துகொண்டு அலப்பறை செய்து வருபவர் அந்த ஆடிட்டர்.

அதிமுகவில், சசிகலா என்ற முக்குலத்து சக்தியை காலிசெய்வதற்கு, அதே முக்குலத்து பன்னீர் செல்வத்தை தேர்வுசெய்தபோதே, இவரின் திறமையின்மை பளிச்சிட்டது.

ஆனால், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்ற ஒரு அடைமொழியின் மூலம் அடங்கமாட்டாமல் தொடர்ந்து அலப்பறை செய்து வருபவர் அவர். ரஜினி என்ற நடிகரை முன்வைத்து, ‍ஏதேதோ ஆலோசனைகளை இவர் காவிக்கட்சிக்கு கொடுத்து வந்தவர்.

இவர் மூலமான வற்புறுத்தலால்தான், கட்சி குறித்த அறிவிப்பையே ரஜினி வெளியிட்டார் என்ற வலுவான கருத்து உண்டு. இவரது ஆலோசனையின்படி, ரஜினியை முன்வைத்து ஒரு புதிய அணியைக் கட்டமைத்து, அதன்மூலம் தமிழக தேர்தல் களத்தை ஒரு ஆட்டு ஆட்டலாம் என்று பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது என்ற தகவல்களும் பரவின.

ஆனால், வயதான சூப்பர் ஸ்டார், நிஜமான அரசியல்வாதிகளுக்கு, தனது பாணி அரசியல் என்ன என்பதை மீண்டும் காட்டிவிட்டார்!

தற்போது, நடிகரின் இந்த அறிவிப்பால் அதிகம் மண்டைக் குடைந்து போயிருப்பது பாரதீய ஜனதாதான்! தொடக்கத்திலேயே, அந்தக் கட்சி அதிமுகவை மட்டுமே முன்வைத்து திட்டங்களைத் தீட்டியிருந்தால் நிலைமை இன்று இந்தளவு மோசமாகியிருக்காது.

ஆனால், ‘நானும் ரவுடிதான்’ என்ற பாணியில், நானும் ‘அரசியல் ராஜகுருதான்’ என்ற அறிவிப்பு பலகையை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு சுற்றும் ஆடிட்டரின் பேச்சைக் கேட்டதன் விளைவு, தற்போது வேறுமாதிரி வந்து நிற்கிறது.

அந்த ஆடிட்டர் அரசியல் விஷயத்தில் திறமையற்றவர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாரதீய ஜனதா கட்சிதான் சுதாரித்த மாதிரி தெரியவில்லை. இனியாவது, அந்த ஆடிட்டரை வேறு வேலையைப் பார்க்கச் சொல்வார்களா மோடி & அமித்ஷா குழுவினர்..?