டில்லி

வாக்காளர்கள் தளத்தை சரி செய்ததன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் விவரங்களை எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர்கள் பட்டியல் மூலம் வாக்காளர்களின் தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை எடுக்க முடியும் என்பது ஒரு தனியார் நிறுவனம் மூலம் தெரிய வந்தது.   ஐதராபாத்தைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹேக்ரூவின் நிறுவனர் தனது புகைப்பட வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும் போது தமது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள் தெரிய வந்ததைக் கண்டறிந்துள்ளார்.

இந்த பதிவிறக்கத்தின் மூலம் ஒரு தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற முடியும் எனத் தெரிய வந்துள்ளது.  இந்த குறைபாட்டைக் களைய அவர் வாக்காளர் பதிவு இணைய தள தொழில் நுட்ப குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதே எச்சரிக்கையைக் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அன்று கவுகாத்தியில் உள்ள இந்தியத் தொழில் நுட்ப கழக முன்னாள் மாணவர் கொத்தப்பள்ளி அனுப்பி உள்ளார்..   இது குறித்த ஒப்புதல் 72 மணி நேரத்தில் அளிக்கப்பட வேண்டும்.  ஆயினும் அவருக்கு டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தான் பதில் கிடைத்தது.

அந்த பதிலில் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க இது தொடர்பான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  பிறகு வந்த தகவலின்படி இந்த பாதிப்பை டிசம்பர் 14 அன்று சரி செய்ததாகத் தெரிய வந்தது.

இது குறித்து கொத்தப்பள்ளி,

“இந்த நடவடிக்கை தரவுகள் வெளியாவதைத் தடுப்பது மட்டுமின்றி நாடெங்கும் உள்ள வாக்காளர்களின் தனிப்பட்ட மொபைல் எண் வெளியாவதும் தடுக்கப்பட்டு மோசடிகளையும் தடுத்துள்ளது.

இவ்வாறு மொபைல் எண்களை அறிந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் அரசு அலுவலகங்களில் இருந்து வருவது போல் வாக்காளர்களுக்கு குறும் செய்திகளை அனுப்பலாம்.  அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதை தடுக்க முடியும்.   இது இந்தியா முழுவதும் நிகழ வாய்ப்பு உள்ளது.  தற்போது இது தடுக்கப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.