சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை பணிகளை முடித்து அடுத்த ஆண்டு இறுதியில் முதல் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை கோயம்பேடு, போரூர், கத்திபாரா, வேளச்சேரி, கீழ்கட்டளை வழியாக செல்லும் வழித்தடம் 5 க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

44.6 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தின் இதன் ஒரு பகுதியான போரூர் – கத்திபாரா இடையே பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மவுண்ட் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போரூரில் இருந்து கத்திபாரா செல்பவர்கள் சென்னை வர்த்தக மையத்தை தாண்டி மனப்பாக்கம் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இடதுபுறமாக திரும்பி டிஃபன்ஸ் காலனி வழியாக ஈக்காட்டுதாங்கல் தொழிற்பேட்டை வழியாக ஒலிம்பியா சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி கத்திபாரா செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் உரிய உத்தரவைப் பெற்று டிஃபன்ஸ் காலனி மற்றும் ஈக்காட்டுதாங்கல் இணைப்பு சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கத்திபாராவில் இருந்து போரூருக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் இந்தப் பணிகள் முடிவடையும் வரை 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கலங்கரை விளக்கம் செல்லும் மற்றொரு வழித்தட பணிகள் நடைபெற்று வந்ததால் போரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு தற்போது தான் அங்கு போக்குவரத்து சீரான நிலையில் மீண்டும் ஒரு டேக் டைவர்ஸன் குறித்த அறிவிப்பு அந்தப் பகுதி மக்களை சோர்வடையச் செய்துள்ளது.