சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து  கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர்.

இந்த நிலையில் டிசம்பர்  5ம் தேதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வை உடனடியாக காண விவாதிக்குமாறு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,   இலங்கை கடற்படையினரால் 13-12-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14-12-2023) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக
தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கைவசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.