விருதுநகர்: ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு என்ற போஸ்டர் விருதுநகர் பகுதியில் திடீரென காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பேசும்பொருளானது. இந்த விவகாரம் பாஜக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக நிர்வாகிகளின் போஸ்டர் யுத்தம் அகில இந்திய பாஜக தலைமையை மிரள வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, விருதுநகர் தொகுதியில், கடுமையான போட்டி நிலவியது. அங்கு சிட்டிங் எம்.பி.யான மாணிக்கம் தாகூர், இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுஉள்ளார். அவரை எதிர்த்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில், மறைந்த விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இங்கு கடுமையான போட்டி நிலவியது. அதனால் பணப்புழக்கமும் காணப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக திடிரென அந்த பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் காணப்பட்ட இந்த போஸ்டர்களை கண்ட பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் பரபரப்பு அடைந்தனர்.
அந்த போஸ்டரில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையை மிரள வைத்துள்ளது.
முன்னதாக கோவை தொகுதியில் போட்டியிட்ட, மாநலி பாஜக தலைவரான அண்ணாமலை, வேட்புமனு தாக்கல் செய்த தினத்தன்று அ செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோவை தொகுதியில் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எந்த செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். ஆனால், தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் விருதுநகரில் பணத்தை சுருட்டி விட்டதாக பாஜகவினரே ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக நடிகை ராதிகா அறிவிக்கப்பட்டது முதலே கட்சிக்குள் சர்ச்சைகள் எழுந்தன. அந்த தொகுதியை பேராசிரியர் ராம.சீனிவாசன் எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைமை அவரை மதுரைக்கு வேட்பாளராக அறிவித்தது, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விருதுநகர் எம்பி தொகுதிக்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விருதுநகர் தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன.இருளப்பன் ஆகியோரை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சி தலைமை நியமித்தது. மேலும், தேர்தலையொடிடடி, விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு கட்சியில் இருந்து குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முறையாகவும், முழுமையாகவும் கட்சியினருக்கு கொடுக்கப்படவில்லை எனக்கூறி பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் அதிருப்தியடைந்தனர். அதன் வெளிப்பாடே போஸ்டர் யுத்தம் என்று கூறப்படுகிறது.