மதுரை:

வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

இதையடுத்து புதிய மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 18ந்தேதி நடைபெற்று வாக்குப்பதிவு மின்னணு  இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், பெண் வட்டாட்சியர் சம்பூரணம் நுழைந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மதுரை ஆட்சியர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை நியமித்துள்ளது.

நாகராஜன்  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளராக ஏற்கனவே பணியாற்றியவர்.  அவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார். தேவைப்பட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணபட்டுவாடா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகராஜன் எச்சரித்துள்ளார்.