மதுரை:

மிழகத்தில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள்  தேர்தல் அதிகாரி புகுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மதுரைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன், உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதாகவும், வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குப்பெட்டிகள் அனைத்தும், மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக உள்ளே சென்று 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள்  சஸ்பெண்டு  மட்டுமே செய்யப்பட்டுள்ள நிலையில் வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே,  மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.