மதுரை :
தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் தி.மு.க. பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இன்று அவர் ஆஜராகவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.
தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவிக்கவே, மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.
இந்த வழக்கில் அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.
அதே நேரம், தாசில்தார் காளிமுத்து, தன்னை யாரும் தாக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கோவிலுக்குள் தெரியாமல் செருப்புப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மேலூர் போலீசார், அழகிரி உட்பட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அழகிரி உட்பட ஒன்பது பேர் ஆஜராகவில்லை.
வழக்கு, வரும் அக்டோபர் மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.