லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் டி.ராஜேந்தர் சில தினங்களுக்கு முன்பு இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் அதிமுக, திமுக சந்திக்கின்ற முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல் களம். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்ந்திருக்கிறார்கள் பக்க பலம். அதைத்தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் லட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் டி.ஆர்.ராஜேந்தர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், கொடுத்ததை கொடுத்தால் வாக்குகளை பெற்று விடலாம் எனும் நிலையில், தான் தேர்தலை சந்திப்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும், அதனால் தற்போது தேர்தலைப் புறக்கணித்து விட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் 39 வேட்பாளர்களை தயார் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாகவும் ஆனால் தனது நிலைபாட்டை விளக்கிவிட்டு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனும் முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.