சென்னை :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசின்  இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில்,  புதிதாக  சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளது .  இதை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த கல்வி நிறுவனத்தில்,  2025-2026 கல்வியாண்டு முதல் இதழியல் பட்டயப் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும். தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவையில் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்த்நது, சென்னை இதழியல் நிறுவனத்திற்கு (CIJ) தமிழக அரசு ₹7.75 கோடி நிதியை அனுமதித்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் அமைக்கப்பட்ட இந்த நிறுவனம், 2025-26 கல்வியாண்டு முதல் இதழியலில் முதுகலை டிப்ளோமா படிப்பை வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தலைவராக  தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் இயக்குநருமான என். ரவி,   தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தி இந்துவின் முன்னாள் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிறுவனம் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில்,  உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு அடுத்த மாதம் முதல்  வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.