பகுதி-6. திராவிடத்தால் வீழ்ந்தோம், ஆரியத்தால் எழுவோம் – த.நா.கோபாலன்
பிறப்பிலும் கோளாறுகள் உண்டுதான். ஆனால் வளர்ப்பு சிலவற்றை சரி செய்யமுடியும்.
உடல்ரீதியான genetic disorders சிலவற்றுக்கு மாற்று இல்லை. ஆனால் எழும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் ஓரளவு கட்டுக்குள் வைக்க இயலும்.
சாதீயக் கண்ணோட்டம் உடன் பிறந்ததா? நிச்சயமாக இல்லை. எல்லாம் வளர்ப்பைப் பொறுத்தே.
பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை இழைப்பான்
துரை இம்மென்றால் நாய் போல் உழைப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;
…..
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு
நாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு
என இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே மகாகவியால் குமுறமுடிந்திருக்கிறதே. ஆனாலும் அவர் ஒன்றும் உலக அதிசயமில்லை. அதே போன்ற முற்போக்கு சிந்தனையாளர் கள் எல்லா பிரிவுகளிலும் காலாகாலமாய் இருந்து வந்திருக்கின்றனர்.
லா இலாஹா இல்லல்லா, முகம்மது உர் ரசூலுல்லா என்பது முஸ்லீம்களின் கலீமா அல்லவா? ஔரங்கசீப் காலத்தில் வாழ்ந்த ஒரு சூஃபி ஞானி நிர்வாணப்பக்கிரியாக அலைய, அவர் கைது செய்யப்பட்டு தர்பாருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கலீமாவைச் சொல், நீ உண்மையான முஸ்லீம் என நிரூபி, நீ தப்பிக்கலாம் என்கிறார் சக்கரவர்த்தி,.
அல்லாவைத் தவிர வேறு இறைவனில்லை, நபிகள் தான் அவரது தூதர் எனக் கலீமா சொல்கிறது. நிர்வாணப் பக்கிரி சூஃபி கலீமாவை சொல்ல விழைகிறார். ஆனால் லா இலாஹாவில் அவரது தொண்டை அடைத்துக்கொள்கிறது…அதாவது கடவுள் இல்லை என்பதுடன் அவரும் முயன்று பார்க்கிறார். ஊஹும் பயனில்லை. கடவுள் இல்லை அல்லாவைத் தவிர என அவரால் முடிக்க இயலவில்லை.
“என்னுடைய தேடல் இன்னமும் முடியவில்லையே அதனால் அல்லாதான் ஒரே கடவுள் என என்னால் சொல்லமுடியவில்லை,” என்பார் அந்த ஞானி. அவர் தலை துண்டிக்கப்படும். இந்த அற்புதமான கதையை அருந்ததிராய் அண்மையில் வெளியான அவரது The Ministry of Utmost Happiness என்ற புதினத்தில் நினைவுகூர்ந்திருப்பார்.
சர்மத் என அறியப்படும் அச் சூஃபிக்கு டில்லியில் தர்கா இருக்கிறது, ஆயிரக்கணக்கானோர் அங்கே வழிபடுகின்றனர் இன்றும்.
தீவிர ஏக இறை தத்துவம் பேசும் இஸ்லாத்திலேயே இப்படிப் பட்டவர்கள் உருவாக முடிந்திருக்கி றதே? சமதின் அனுபவங்கள் அத்தகைய தேடலுக்கு அவரை உந்தியிருக்கிறதல்லவா, அதைப் போன்றே பாரதி உள்ளிட்ட பலர் சமூக நீதியை மறுக்கும் பிராமணீயம் நிராகரிக்கப்படவேண்டும் என குரல் எழுப்பியிருக்கின்றனர்.
எனவே சாதி புத்தி என்பது உடன்பிறந்த ஒரு நோயல்ல, தீர்வே இல்லாத வக்கிரமும் அல்ல.
ஒரு சாதியினருக்கு வணிகத் திறமை இருக்கலாம், இன்னொரு பிரிவினருக்கு பொருள் ஈட்டுவதில் அதிக ஆர்வமிருக்கலாம், இன்னும் சிலர் அடி, தடி, தகராறுகளில் முன் நிற்கலாம், சிலர் கற்பதில் மட்டும் ஆர்வம் காட்டலாம், அவர்களுக்கு வெளியுலகமே தெரியாமலும் போகலாம்.
ஆனால் சூழலின் விளைவாய் உருவாகும் குணாம்சங்களை பிறப்பால் எழுவாவதாகக் கருதுவது பெரும் தவறு. அப்படி நினைப்பது கூட ஒருவகை பிராமணீயமே.
இந்த இடத்தில் ஒரு விளக்கம் தேவைப்படலாம். பிராமண சாதி புத்தி என்பது சரியான புரிதலில்லா தன் விளைவு, எளிமைப்படுத்துதல் அல்லது வெறுப்பைத் தூண்டும் சொற்றொடர், ஆனால் பிராமணீயத்தை சாடுவது, அத்தகைய சிந்தனைகளை நிர்மூலமாக்குவது அவசியம். காரணம் சாதி அடுக்கினை நியாயப்படுத்துகிறது பிராமணீயம்.
தேவேந்திர குல வேளாளர் என்றுதான் தங்களை அழைக்கவேண்டும் என வலியுறுத்தும் பள்ளரி னத்தாரின் தலைவராக வலம் வரும் முன்னாள் மார்க்சிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி, தங்கள் பிரிவினரை பட்டியலினத்தார் என்று கூட அழைக்கக்கூடாது என்கிறார்.
ஒவ்வொரு சாதியினரும் அடுத்தவர்களை விட தாங்கள் மேலானவர்கள் என வெளிப்படையாகவே கொக்கரிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு வரலாற்றுக் காரணங்களினால் பரவலாக ஒட்டுமொத்த சமூகமும் சாதி அடுக்கினை அங்கீகரிக்கிறது, பிராமணரல்லாதார் பிராமணர்களாகத் துடிக்கின்றனர். இந்த sanskritisation போக்கு மிகவும் ஆபத்தானது, அதனை எதிர்த்து தொடர்ந்து சமரசமற்ற போராட்டம் அவசியம்.
அதுவும் மோடி ஆட்சியில் இந்திய வரலாற்றையே பிராமணீய இந்துமத வரலாற்றாகப் பார்க்கும் கருத்தாக்கத்தினை நாடெங்கும் காணலாம். முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் மஹாரஷ்டி ராவில் ஆளும் பாஜக பள்ளிப் பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர்களின் பங்கையே இருட்டடிப்புச் செய்யமுயல்கிறது.
பாகிஸ்தானில் இப்படித்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி தவறான தகவல்கள், இந்துக்கள் அனைவரும் முஸ்லீம்களுக்கெதிரானவர்கள் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாடங்கள். விளைவு அங்கே இஸ்லாமிய மத வெறி பல மட்டங்களிலும்.
அதேபோன்றதொரு நிலையினை இங்கே உருவாக்க முயல்கின்றனர். மாட்டிறைச்சி தொழிலே ஸ்தம்பித்துப்போய் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்கள் உயிருக்கே உத்திரவாதம் இல்லை என்ற ஒரு நிலை.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜகவே வெல்லும் என்று பொதுவாக கணிக்கப்படு கிறது. அதன் பின் இந்துத்துவா இன்னமும் உக்கிரமாக செயல்படும். அப்படிப்பட்ட ஒரு ஃபாசிச சிந்தனைக்கு தமிழக பிராமணர்கள் மத்தியில் பெரும் ஆதரவிருக்கிறது என்பது கசப்பானதொரு உண்மை.
திராவிடத்தால் வீழ்ந்தோம் ஆரியத்தால் எழுவோம் என நம்புகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை , பாஜக ஆரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனவே அவர்களது ஆதரவு. அது எப்படியெல்லாம் சமூகத்தை பிளவுபடுத்தும், பாழடிக்கும் என்பது பற்றியெல்லாம் அதிகமாக பிராமணர்கள் சிந்திப்பதில்லை.
ஆச்சார வாழ்வுக்கு பாஜகவே உறுதிமொழி அளிக்கும். அதன் வழியே இழந்துவிட்ட செல்வாக்கினையும் மீட்டுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர்.
இப்பின்னணியில் பூணூல், சந்தியா வந்தனம், காயத்ரி ஜெபம், இன்ன பிறவற்றை வெறும் சாதிச் சடங்குகள், அவற்றால் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏதுமில்லை என்று விட்டுவிடமுடியுமா?
அவரவர்க்கு அவரவர் சாதிச் சடங்கு என்பது சரி. ஆனால் அத்தகைய சடங்குகளை செய்யும்போது உளவியல் ரீதியான தாக்கம் என்ன என்பதையும் நோக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
(தொடரும்)