தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-5: த.நா.கோபாலன்

பகுதி 5:  நாம எப்டி பொழைக்கணும்னு சொல்லியிருக்கு? –  த.நா.கோபாலன்

என் குடும்ப வட்டாரத்திலிருக்கும் மிகச் சில சக சிந்தனையாளர்களில் ஒருவனிடம், பத்திரிகை.காமில் வெளியாகும் தொடரை நீ படிக்கிறாயா எனக் கேட்டேன்.

(அவன் இளைஞன், எனவே ஒருமையில்.)

அவனது பதில் எனக்கு ஏமாற்றமளித்தது: “ஹூம்…படிக்கிறேன். ,மொதல் மூணு சாப்டர் படிச்சிட்டேன். நீங்க எழுதுறீங்களா, லிங்க் அனுப்புறீங்களா…அதுனால படிச்சிருவேன்…ஆனால் ஃப்ராங்க்கா சொல்லணும்னா எனக்கொண்ணும் தொடர்லியே பெரிசா இண்ட்ரெஸ்ட் இல்லே…”

“அடப்பாவி …என்னய்யா நீயே இப்டி சொல்றே…ஏன் நடையில, presentationல   ஏதாவது கோளாறா…சொல்லு…திருத்திக்கிறேன்…”

“நோ நோ, அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல…எளிமையா இருக்கு…வேகமா கொண்டு போறீங்க…நேர்ல பேசுற போது அறுக்கிறமாதிரியில்ல ஹ ஹ ஹா…ஆனால் பிரச்சினை என்னிடம்தான்.. நான் என்றாவது பிராமணனா நெனச்சிருந்தா, உணர்ந்திருந்தா, நீங்க சொல்றதையெல்லாம் ரொம்ப க்ளோசா ஃபாலோ பண்ணனும்னு தோணும்…நான் பூணூல் போட்றதே ஒரு கட்டாயத்துல..மத்தபடி நான் என்னைப் பற்றி பிராமணனாக நெனச்சதே இல்ல… அப்டி அடையாளப்படுத்திகிட்டவே மாட்டேன்…என்னோட வேலையிலேயும் அது ஒரு பிரச்சினையானது கெடயாது… சோ, பிராமணர்கள் வரலாறு என்னாங்கிறதுலியோ, அவங்க உளவியல் பத்தியோ எனக்கு அக்கறை இல்லை…”

ஒருவரது மன நிலையை உருவாக்குவதில் அவரவர் குடும்ப சூழல், பெற்றோரின் பார்வை, உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நாமனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிராமண இளைஞர்/இளைஞிகள் எத்தகைய தாக்கங்களுக்குள்ளாகின்றனர்?

பிராமணர் என்று பொதுப்படையாகக் கூறுவதே சரியில்லைதான். அய்யர், அய்யங்கார், கன்னடம், தெலுங்கு, மராத்தி, எனவும், அந்தந்தப் பிரிவுக்குள்ளும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. தவிரவும் பொருளாதார நிலையைப் பொறுத்தும், பெற்றோரின் புரிதலைப் பொறுத்தும் வளரும் சூழல் மாறுபடுகிறது. அந்நிலையில் இப்படித்தான் அவர்கள் வளர்கிறார்கள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது.

என் தந்தை நாமமெல்லாம் போடுவார். (நானே நாமமணிந்து கல்லூரிக்குச் செல்வேன்!) பூஜைகள் செய்வார். சுலோகங்கள் சொல்வார். தன் தாய் தந்தையர்க்கு தெவசமெல்லாம், சகோதரர்கள் அனைவரையும் வரவழைத்து, தடபுடலாக செய்வார். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று எனக்கும் என் தம்பிக்கும் உபநயனம் செய்துவைத்தார்.

அவர் வசதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு அமைப்புக்களில் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பிராமணர், பிராமணரல்லாதோர் என பிரச்சினை எழும். அவர் சாதியைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் அவரை பிராமணர், அய்யங்கார் என அடையாளப்படுத்தி ஒதுக்கும் முயற்சிகள் நடக்கும். ஆனால் அவர் அதையெல்லாம் பெரிதுபடுத்தமாட்டார்.

எனக்குத் தெரிந்து ஒருமுறை கூட அவர் வீட்டில் எந்தக் கட்டத்திலும் நாம் பிராமணர்கள், இதனால் வஞ்சிக்கப்படுகிறோம், என்ன அநியாயமிது என்று பேசியதே கிடையாது. நான் பெரியார் கூட்டங்களுக்குச் சென்று வருவேன் அவருக்குத் தெரியும், ஆனால் ஒன்றும் சொல்லமாட்டார்.

காங்கிரஸ் மீது பிடிப்புண்டு. அவருக்கு மிக நெருக்கமானவர் எங்க ஊர் எம் எல் ஏ பரிசுத்த நாடார் கிறித்தவர். தஞ்சை ராமமூர்த்தியுடனும் நல்ல பழக்கம். பொருளாதார ரீதியாக நாங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் பூண்டி வாண்டையார்களிடம் சரணடைய நேரிட்டது. ஒரு வாண்டையாருக்கு பிராமணர்களென்றால் அடியோடு ஆகாது. அவரால்தான் ஓர் அமைப்பில்  என் தந்தை அவமானப்படுத்தப் பட்டார். ஆனால் வேறு வழியில்லாமல் அவரது உதவி கோரினோம். அது சரிவரவில்லை அப்புறம் பூண்டி புட்பம் கல்லூரி தாளாளர் துளசி அய்யா வாண்டையாரை சந்தித்து, நடையாய் நடந்து ஏதோ உதவி பெற்றோம். இத்தனைக்குப் பிறகும் கூட சாதிப் பிரச்சினையாக எதனையும் என் தந்தை பார்க்கவில்லை. அந்த அளவு தாராள சிந்தனை அவருக்கிருந்தது.

சாதியை ஒன்றும் விட்டுவிடவில்லை. எனக்கு எங்கள் சாதியில்தான் பெண் பார்த்தார். வைதிகத் திருமணம்தான். ஆனாலும் சாதி உணர்வு அவரிடம் ஒன்றும் ஆழமாக வேரூன்றிவிடவில்லை.

நான் மெல்ல மெல்ல நாத்திகனாகி, கம்யூனிஸ்டாகி, ஒரு கட்டத்தில் நக்சல் இயக்கம் மீது அனுதாபம் ஏற்பட்ட காலத்தில் அவருடன் விவாதம் செய்வேன். பிடிகொடுக்காமல் பேசுவார். ஆனால் என்னை திட்டமாட்டார், ஆஹா இப்படியெல்லாம் சிந்திக்கிறாயா, பேசுகிறாயா என குதிக்கமாட்டார். மாறாக இப்படியெல்லாம் பேசுகிறானே இவன், ஏதோ படித்திருக்கிறானே எனப் பெருமைப்படுவார்.

என் தாய் அந்தக் காலத்துப் பெண்மணிதான். மடிசார். ஸ்லோகம் சொல்லுதல். பூஜை செய்தல். விளக்கேற்றுதல். புற்றுக்குப் பால் தெளித்தல், இத்தியாதி. நான் நாத்திகனானதில் ரொம்பவே வருத்தம். ஆனால் குலத்தைக் கெடுத்துவிட்டானே கோடரிக்காம்பு என்று பேசும் ரகமல்ல. ஆச்சார அனுஷ்டானங்களும் வரையறைக்குள்ளேதான் இருக்கும். மடி அது இதென்று அதிகம் படுத்தமாட்டார். இந்தச் சூழல் ஒரு வகையில் என் சிந்தனைப் போக்கின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியிருந்திருக்கும்.

இதே நிலை பரவலாக இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் நான் பார்த்தவரையில் சொல்லமுடியும். என் சித்தப்பா பையன் ஒருவன் வயது ஏற ஏற தீவிர பக்தி, குடுமி, பஞ்சகச்சம், பிள்ளையை மாம்பலம் வைணவர் பள்ளியில் சேர்த்தார். அவர் அம்மா ரொம்பவும் ஆச்சாரம் என்றால் இவர் பல படி மேலே போய்விட்டார். என் மீது அவருக்கு கடுங்கோபம். என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.

இன்னொரு உறவினர் இருக்கிறார். பிராமணன், பிராமணன், பிராமணன் இதேதான் சதா சர்வகாலமும். மந்திரம்போல் உச்சாடனம். அநீதி இழைக்கப்பட்டுவிட்டது, இழைக்கப்படுகிறது, ஒடுக்கப்படுகின்றனர், அவமானப்படுத்தப்படுகின்றனர் கேட்பார் இல்லை, இப்படியேதான் புலம்பிக்கொண்டிருப்பார்.

”நாம எப்டி பொழைக்கணும்னு சொல்லி யிருக்கு? பிச்சையெடுத்து. உஞ்சவிருத்தி தானே. தினமும் தெருத்தெருவாகப் போய் பகவன் நாமாவைச் சொல்லிப் பாடவேண்டும், கிடைக்கும் அரிசியைக் கொண்டுவந்து அதில் சமைத்து சாப்பிடவேண்டும். இப்படிப் பிச்சையெடுத்து உயிர்வாழவென்றே ஒரு ஜாதியை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் பெருமை என்னவிருக்கிறது. அநியாயத்துக்கு ஈவேரா கதை கட்டிவிட்டு, நம்மை பொது மேடைகளில் அசிங்கப்படுத்தி, திமுகவை ஆட்சியிலும் உட்காரவைத்துவிட்டார். இப்போ நம்ம பசங்களெல்லாம் பிழைக்க வழியில்லாமல் திண்டாடுகின்றனர்…நீங்களெல்லாம் ஏதோ புரட்சி பேசி எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையினையும் பாழாக்குகின்றீர்கள்..”

இப்படித்தான் பல பிராமணத் தந்தைகள் பேசுகின்றனர். பிள்ளைகள் உள்வாங்குகின்றனர்.
English Summary
Brahmins face social justice? T.N.Gopalan Series-5 How we earning?