தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-4: த.நா.கோபாலன்

பகுதி 4:  வீழ்ச்சிதான் எந்த அளவு?  –  த.நா.கோபாலன்

ஜெண்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பிராமணப் பையன் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வான். ஆஹா, அது இட ஒதுக்கீட்டிற்கெதிரான படம் எனப் பலரும் கொதித்தனர்.

நான் அப்படிப் பார்க்கவில்லை. நன்றாகப் படித்தும், திறமையிருந்தும் பிறப்பின் காரணமாக வாய்ப்புக்களை சிலர் இழக்கின்றனர் எனக் கூறுவது ஒன்றும் பாவமில்லை, சரியே கூட.

அதில் இட ஒதுக்கீட்டிற்கெதிரான நுண்ணரசியல் என வாதிடப்பட்டது, நானோ பிராமணக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அப்பகுதி சித்தரிப்பதாகவே பார்த்தேன்.

(இட ஒதுக்கீடு தொடர்பில் பின்னர் விரிவாக விவாதிப்போம்.)

அரசு மருத்துவ, பொறியியற் கல்லூரிகளில் சேரமுடியாமல் போனாலும், பிராமண மாணவர்கள் பெரும்பாலானோர், ஐ ஐ டிகளுக்கு தகுதி பெற்றுவிடுகின்றனர், அங்கு தேர்ச்சி பெற்று, வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுகின்றனர்.  சாஃப்வேர் துறை சார்டர்ட் அக்கௌண்டன்சி இப்படி வேறு வாய்ப்புக்களும் உண்டு. எனவே திராவிட இயக்க ஆட்சியிலும் அவர்கள் கொழிக்கமுடிகிறது எனக் கருதுவோர் பலர்.

Tamil Brahmans: The Making of a Middle-Class Caste

என்றொரு ஆய்வு நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. ஆய்வாளர்கள் இன்று பிராமணர்கள் பெரும்பாலும் நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தினராகிவிட்டனர் எனக் கூறுகின்றனர். ஆனால் நம்பகமான புள்ளி விவரங்கள் ஏதுமில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

1984ல் எம் ஜி ஆர் தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு அனுமதியளிக்கிறார். பின்னர் பொறியியற் கல்லூரி களுக்கும். அதன் பிறகு பொருளாதார தாராளமய மாக்கல். கணினி தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி. இத்தகைய மாற்றங்களால் பிராமணர்கள் பெரு மளவில் பயனடைந்திருக்கின்றனர்.

வெளிநாடுகளில் குடியேறும் பிராமணர்கள் தங்கள் பெற்றோரின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்கின்றனர் என்பதும் உண்மை. Money Order Economy பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

மற்ற சாதிகளுடன் ஒப்பிடும்போது நடுத்தரவர்க்க பிராமணர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் அநேகரின் கதை இதுதான் எனச் சொல்லமுடியாது.

நான் முன்னர் குறிப்பிட்டிருப்பதைப் போன்று பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிராமணர்கள் ஏராளம். என் குடும்பத்தையே எடுத்துக்கொண்டால், சிறிதளவு நிலம் வைத்திருந்தோம், அது இருந்த பகுதியின் பெயர் எனக்குத் தெரியும், அவ்வளவுதான், ஆனால் நான் நேரடியாகச் சென்று பார்த்ததில்லை, கலப்பை என்றால் என்ன என்று கூடத் தெரியாது.

என் தந்தை அங்கு எப்போதாவதுதான் சென்று வருவார்,  எந்த உழைப்பும் இல்லாமலேயே விளைச்சலில் ’எங்களுக்கு உரிய பங்கு’ வந்து சேரும். அது ஒன்றும் தவறாகவே எங்கள் எவருக்கும் படவில்லை. நாளடைவில் குத்தகைதாரர் தன் வலிமையினைப் புரிந்துகொண்டார். பங்கு குறைந்துகொண்டே வந்தது. இறுதியில் அவரிடமே அந்த நிலம் விற்கப்பட்டுவிட்டது.

என் தந்தை நடத்திவந்த தட்டச்சு பயிலகத்திற்கும் மாணவர்கள் வருவது குறைய, திக்குமுக்காடிப்போனோம். வீட்டில் இருந்த கண்ணாடி பாட்டில்களை எடுத்துச் சென்று யாராவது வாங்கிக்கொள்ள மாட்டார்களா என்று நாளெல்லாம் அலைந்து திரிந்து, ஏமாற்றத்துடன் என் தந்தை திரும்பிய காட்சி இன்னும் என்னைக் கொல்லும்.

நான் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படவில்லை. ஏகப்பட்ட கோளாறுகள் பயிலும்போதே. எனவே professional coursesல் சேர்வது என்பதை எல்லாம் கற்பனை செய்தே பார்க்கவில்லை. ஒரு வழியாக படித்து முடிக்கும்போது அரசுப் பணியில் சேரும் வயதினைக் கடந்திருந்தேன்.

பள்ளியில் நான் சராசரி ரகம்தான். முதல் மாணவனில்லை. என்னுடன் படித்த மற்ற பல பிராமணப் பையன்களும் மக்கு பிளாஸ்திரிகளே.

பள்ளி இறுதித் தேர்வு அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் தொடர்ந்து மூக்குடை பட்டிருந்தவர்கள் பலர். அவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் எப்போது வேலைக்குப் போய் நாலு காசு பார்ப்பார்கள் என ஏங்கிக்கொண்டிருந்த குடும்பங்கள் பரிதவித்தன. பின்னர் அவர்களெல்லாம் எங்கே போய் முடங்கினார்கள் என்பது பற்றிய விவரங்கள் என்னிடமில்லை. அவர்களில் பலர் இன்னமும் பிழைப்புக்கு அல்லாடிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது என் ஊகம். பத்திரிகையாளனான பிறகு ஏழ்மையில் வாடும் பல பிராமண குடும்பங்களை மாநிலத்தின் பல பகுதிகளிலும் சந்தித்திருக்கிறேன்.

நான் அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்துவிட்டேன், ஆனால் கடும் போராட்டங்களுக்குப் பின் தான்.

ரெங்கநாதன் அய்யர் என்பவர், ஒரு பின்னூட்டத்தில், ”இங்கே காரைக்கால் அருகே திருமகாளம் அருமண்மொழித்தேவன் சன்னாநல்லூர் சுற்று வட்டார கிராமங்களில் பிராமணர்கள் ஏர்பிடித்து உழவும் மாட்டு வண்டி ஓட்டுபவர்களாகவும் மூட்டை தூக்கிகளாகவும் இன்னபிற சிறு வேலைகளும் செய்கின்றனர்,”  எனத் தெரிவித்திருக்கிறார்.

இது சற்று வியப்பான செய்திதான். அத்தகைய தொழில்களுக்குச் செல்லமுடியாத அளவு மனத்தடை இருக்கும் என்பதுதான் பொதுவான புரிதல்.

தலைநகர் புதுடில்லியிலேயே கழிப்பறை சுத்தம் செய்வோராக பிராமணர்கள் பலர் பணியாற்றுவதாக செய்திகள் உண்டு. அந்த அளவு அவர்களுக்கு நெருக்கடி.

தமிழ்நாட்டில் அவ்வளவு மோசமாக இருக்காது என நினைத்தேன், அதுவும் தவறு என்று இப்போது புரிகிறது.

இதையெல்லாம் இவ்வளவு விரிவாகக் கூறக் காரணம், அய்யகோ, இப்படியாகிவிட்டனரே பிராமணர்கள், இது அநீதி அல்லவா என்று புலம்புவதற்காக அல்ல.

மாறாக  அரசியலதிகாரத்தை இழந்தாலும் பிராமணர்கள் பெரும்பாலானோர் செழிக்கவே செய்கின்றனர் என்பது மிகை என வலியுறுத்தவே.

ஒட்டுமொத்த சமூகத்தில் எந்த அளவு ஏற்றத் தாழ்வுகள் மலிந்திருக்கின்றனவோ, அதற்கேற்றாற்போல்தான் பிராமணர்கள் மத்தியிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. அய்யோ எல்லாமே போய்விட்டது என்று பிரலாபிக்கும் அளவு வீழ்ந்துவிடவுமில்லை.  பிரமிக்கவைக்கும், பெரிதாக பொறாமைப்படும், அளவு வளர்ந்துவிடவுமில்லை.

ஆனால் நாம் கொடிகட்டிப் பிறந்தவர்களின் சந்ததியினரல்லவா, இப்படிப் பலவற்றுக்கு  ஆலாய்ப் பறப்பதா, ஜீவனம் மிகக் கடினமாகிவிட்டது, போதாக்குறைக்கு, ஊடகங்களிலும் வேறு தளங்களிலும் அவ்வப்போது எள்ளி நகையாடப்படுகிறோம் என நினைக்கும் பிராமண இளைஞர்கள்  இயல்பாகவே திராவிட இயக்கத்தின் மீது கடுங்கோபம் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் வரலாற்றை சரிவர அறியவில்லை. அறியச்செய்யவே இத் தொடர்.

(தொடரும்..)
English Summary
Brahmins face social justice? T.N.Gopalan Series-4: it is the fall,. but how much?