சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் வகை பன்றி காய்ச்சல் அதிகரித்துள்ளதால், பன்றிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், உதகை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளன. அதுபோல, கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுப் பன்றிகள் பாதிக்கப்பட்டு உயிரிந்துள்ளன.
உயிரிழந்த பன்றிகளை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், பன்றிகள், ஆப்ரிகன் வகை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து,. நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத், “காட்டு பன்றிகள் ஆப்ரிகன் பன்றி காய்ச்சலால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வன விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவ வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூடலூர் வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காட்டுப் பன்றிகள் தொடர் உயிரிழப்பு சம்பவம் சீரடையும் வரை நீலகிரியில் வளர்ப்பு பன்றிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.