சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை,  விழுப்புரம்

ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் நெய்வணை சொர்ணகடேஸ்வரர், விழுப்புரம்.

ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் தான் லிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டுதோறும் வரும் சிவராத்திரியன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜை, வழிபாடு செய்யப்படுகிறது. இதெல்லாம் வருடந்தோறும் நடக்கும் பூஜை, புனஸ்காரங்கள் தான். ஆனால், தமிழகத்தில் ஒரு சிறப்பு மிக்க, கோயிலில் மகா சிவராத்திரி அன்று லிங்கம் நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது.

இந்த கோயிலில் மூலவராக சொர்ணகடேஸ்வரர் அருள் பாலிக்கிறார். கோயில் வளாகத்தின் முன்பு பலி பீடமும், நந்தி மண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று மட்டும் காலையில் சூரியனின் ஒளியானது லிங்கத்தின் மீது விழுகிறது. அப்போது லிங்கமானது பச்சை, நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களாக மாறி சிவன் தரிசனம் தருகிறார்.

ஞானசம்பந்தர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த போது, நெய்வாணை பகுதியில் எழுந்தருளியுள்ள சொர்ணகடேஸ்வரர் சன்னதி வந்தடையவதற்கு முன் சூரியன் மறைந்துள்ளது. இதன் காரணமாக வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த ஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் அம்பாள் மூலமாக உதவி செய்துள்ளார்.

திக்கு திசை தெரியாமல் நின்ற தனக்கு சிவபெருமானே வழிகாட்டிய உற்சாகத்தில் ஞானசமந்தபர் நடனமாடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்ததலத்தில் திருஞானசம்பந்தர் திருவுருவமானது நடனமாடிய கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் நெய்வாணை பகுதியில் உள்ள ஒரு ஏரி ஒன்று உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அச்சத்தால் தங்களை பாதுகாத்துக் கொள்ள கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர். அப்போது, சிவபெருமானே இளைஞர் போன்று ஒரு தோற்றத்தில் சென்று ஒவ்வொருவரது வீடுகளிலும் இருந்த நெல் மூட்டைகளைக் கொண்டு நெய்வாணை ஏரியினை அடைத்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றினான். அதோடு மட்டுமல்லாமல், உடைகளை இழந்த மக்களுக்கு சொர்ணங்களை வழங்கி அவர்களை செல்வமிக்கவர்களாக மாற்றினார்.

இதன் காரணமாக இந்த கோயில் சொர்ணகடேஸ்வரர் கோயில் என்று வரலாறு பெற்றது. சிவனுக்கே உரிய நாளான சிவராத்திரி அன்று ஊர் மக்கள் விழா கொண்டாடுகின்றனர்.

முன்னோர் செய்த பாவங்களால் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருவோர், வருமானமின்றி தவிப்போர், கும்பத்தில் நிம்மதின்றி இருப்போர், தொழிலில் நஷ்டம், வேலையின்மை என்று பல பிரச்சனைகளை அனுபவித்து வருவோர் இந்த கோயிலுக்கு வந்து சொர்ணகடேஸ்வரரை வணங்கி வழிபட்டு வர வாழ்வில் அனைத்து வளங்களையும் கொடுத்து செல்வ, செழிப்போடு வாழ வழி செய்வார் என்பது நம்பிக்கை.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ள ஏ. குமாரமங்கலத்திற்கு வடக்கில் 7 கிமீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திலிருந்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவிலும் நெய்வணை உள்ளது.