சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால் அறிய முடியவில்லை.
சுவேதி கொலை குறித்த செய்தி இந்தியா முழுதும் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியானது. மேலும் இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் பொது இடத்தில் வைத்து ஒரு இளம் பெண் கொல்லப்பட்டது மக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் காவல்துறையை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இன்னொருபுறம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசை விமர்சனம் செய்து வருகி்ன்றன.
மற்றொரு புறம், இந்த விசயத்தைக் கையில் எடுத்த உயர்நீதி மன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
ஆகவே கொலையாளியை உடனடியாக பிடித்தே ஆகவேண்டிய நெருக்கடி காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே போலீஸிடம் இருந்த இந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தனிப்படை பிரிவுகளும் கொலையாளியை தேடி வருகின்றன. சென்னையில் உள்ள ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
காவல்துறைக்கு இருக்கும் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே புதிதாக ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுவாதியின் குடும்பத்தார், காவல்துறை மீது புகார் தெரிவித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
அந்த புகாரில், “எங்கள் மகள் சுவாதியை இழந்து வாடுகிறோம். குற்றவாளிகளை பிடிப்பது மட்டுமே எங்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும். ஆனால் காவல்துறையினர் குற்றவாளியை பிடிப்பதை விட்டுவிட்டு விசாரணை என்கிற பெயரில் எங்களை நோகடிக்கிறார்கள்” என்று கூறியிருப்பதாக தெரிகிறது. மேலும், விரைவாக குற்றவாளியை பிடிக்க உத்தரவிடும்படி கேட்டுகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் விசாரணை செய்யும் காவல்துறையினருக்கு மேலும் நெருக்கடியை அளித்துள்ளது. அவர்கள் தரப்பில், “சுவாதியை கொலை செய்தவனை பிடிக்க இரவுபகலாக, உணவு, தண்ணீர் இல்லாமல் அலைந்துகொண்டிருக்கிறோம்.
இந்த கொலை வழக்கின் விசாரணையை சுவாதியின் குடும்பம் மற்றும் சுவாதியின் அலுவலகம்.. இரண்டில் இருந்துதான் துவங்க முடியும். விசாரணையில் பலவித கேள்விகளை கேட்கவேண்டியிருக்கும். அப்போதுதான் கொலைக்கான காரணத்தை யூகித்து, குற்றவாளியை நெருங்க முடியும். ஆனால் சுவாதியின் பெற்றோர், நாங்கள் கேட்கும் கேள்விகளை சென்சிட்டிவாக எடுத்துக்கொண்டு வருத்தப்படுகிறார்கள். பிறகு எப்படி விசாரணை நடத்துவது” என்று வருத்தப்படுகிறார்கள்.
மேலும் காவல்துறை தரப்பில், “சுவாதியின் பெற்றோரைச் சொல்லியும் தவறில்லை. சமூகவலைதளங்களில் அந்த அப்பாவிப்பெண்ணைப் பற்றி சிலர் தவறாக எழுதியதை அறிந்து சுவாதியின் பெற்றோர் வருத்தத்திலும் ஆதங்கத்திலும் இருக்கிறார்கள். ஆகவே எங்களது கேள்வி அவர்களை புண்படுத்துவதாய் உணர்கிறர்கள். இதற்குக் காரணம் சமூகவலைதளங்களில் சிலர் சுவேதா பற்றி தவறாக எழுதியதுதான்” என்கிறார்கள்.
மேலும், “எப்படியானாலும் விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம். அதே நேரத்தில் எங்களது தரப்பை உணர்ந்து அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.