திருவனந்தபுரம்:
தூதரகம் பெயரில் பார்சல் அனுப்பி அதன்மூலம் பல கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப் பட்டது தொடர்பாக,  கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ் சிக்கிய நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவர்களிடம்  போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ அளவிலான தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின்பேரிலேயே இதுபோன்ற கடத்தல்கள் பலமுறை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவரதுவீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதுகிடைக்கபெற்ற ஆவணங்களின் மூலம், ஸ்வப்னா ஏற்கனவே  அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது.
ஸ்வப்னாவுக்கு கேரள  மாநிலத்தில் தகவல் தொடர்பு துறையில் மேலாளர் வேலை கிடைத்தது எப்படி? என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தவிவகாரத்தில், ஸ்வப்னாவுக்கு உதவியது, பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் என்றும், அவர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலராக இருந்து வந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூதரகத்தில் தனது பதவிக்காலம் வரை ஸரித்துடன் ஒத்துழைத்து வந்த ஸ்வப்னா, அலுவல கத்தை விட்டு வெளியேறிய பிறகும் கடத்தலைத் தொடர்ந்ததாகவும்,  அது தொடர்பான விஷயங்களை அழிக்க அவர் தனது ஆதரவாளர்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிவசங்கரை கேரள  முதல்வர் அலுவலகம் பதவியை விட்டு நீக்கி உள்ள நிலையில், அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் அலுவலகத்துக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது. தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்க கடத்தலுக்கு துணையாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்வப்னாவின் நியமனம் குறித்து தனக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளார், இது குறித்து சிவங்கரிடத்தில் கேரள முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார். அமீரகத்திலிருந்து ஒரு முறை தங்கம் கடத்துவதற்கு ஸ்வப்னா ரூ. 25 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் கடத்தலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர்களின் ஊழியர்கள் எந்தவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.