கொச்சி:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடக்கிறது.
கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணை காவல் முடிந்ததால், கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, தம்மை காவலில் வைத்து விசாரித்தபோது, டார்ச்சர் செய்ததால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்வப்னா கூறினார். இதையடுத்து ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். முன்னதாக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியான சரித்தை ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மீண்டும் வரும் 27ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel