திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விவகாரத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். எந்த குற்றவாளியையும் அரசு ஒருபோதும் காப்பாற்றாது. இதில் கேரள அரசுக்கு தொடர்பில்லை. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அதிகாரிகளின் விசாரணையில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் விசாரணை தீவரமடைந்து உள்ளது. வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், அவருடன் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோர் நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்களின் இன்றுடன் அந்த காவல் முடிவடைகிறது.

இந் நிலையில், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம், தங்க கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரியிருந்த ஸ்வப்னாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.