சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும்.

முருகப்பெருமான் இக்கோவிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என அழைக்கப்படுகிறது.

மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான்.

கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது.

சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே, அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார்.

பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும்.

தேவர்கள் அனைவரும் சென்று நடந்ததையும் நடக்க தேவைப்படுவதையும் சிவனிடம் எடுத்துக் கூறினார். எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய எனக்கு இது முருகப்பெருமான் மூலம் வரும் புதிய திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். “பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு?” என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான்.

பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க, எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார்.

திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.